தொழிலதிபர் எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன் மிகச் சிறந்த விஞ்ஞானி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் தொழிலதிபர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இவருடைய அம்மா ஒரு சாதாரண பள்ளி ஆசிரியை. அப்பா ஒரு ரியல் எஸ்டேட் தரகர். குடும்பத்தில் 7-வது குழந்தை இவர். பெரிய அளவிற்கு வசதியில்லாத குடும்பம்.
ஆனால் 12 வயது முடிவதற்குள்ளாகவே ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ் என்று அனைத்து ஆங்கில இலக்கிய நூல்களையும் படித்து விட்டார். வாழ்க்கையின் தொடக்க காலத்தில் நிறைய போராடி இருக்கிறார். ரெயில்வே ஸ்டேஷனில் பேப்பர் விற்றிருக்கிறார்.
வாழ்க்கையில் எடிசன் பள்ளிக்கூடத்திற்கு போனதே மொத்தம் 3 மாதங்கள் தான். இதனால் தான் அவர் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது கூட திறமையை மட்டுமே அளவு கோலாக வைத்திருந்தார். கல்வித்தகுதி பற்றி கவலைப்படவில்லை.
ஜே.பி.மார்கன் என்ற அமெரிக்க தொழிலதிபரோடு சேர்ந்து எடிசன் எலக்ட்ரிக்லைட் கம்பெனி என்ற பெரிய தொழிற் சாலையை தொடங்கினார். இந்த கம்பெனி தான் பின்னாளில் ஜெனரல் எலக்ட்ரிக் என்று பெயர் மாற்றம் பெற்றது.
எடிசனின் தொழிற்சாலையில் கண்டுபிடிப்புகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இவரது இன்வென்ஷன் பேக்டரியில் 14 தொழிற்கூடங்கள் இருந்தன. இவற்றில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர். மெயின் தொழிற்சாலை மட்டும் 3 கால்பந்து மைதானம் அளவிற்கு பெரியது. அதில் 10 நாட்களுக்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை உற்பத்தி செய்ய வேண்டும், 6 மாதங்களுக்கு ஒருமுறை பெரிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து செயலாற்றினர்.
அறிவியல் சூத்திரங்களுக்கு பதில், மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்களை கண்டுபிடிக்க இங்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவர் கண்டுபிடித்த போனோகிராப் தான் பின்னாளில் கிராமபோனாக மாறியது.
அலெக்சாண்டர் கிரகாம்பெல் கண்டுபிடித்த டெலிபோனில் பேசுவதற்கும், கேட்பதற்கும் தனித்தனி வழிகள் இல்லை. அதை மேம்படுத்தி எளிதில் பேசும் விதத்தில் உருவாக்கியவர் எடிசன். தொடக்க காலத்தில் டைப்ரைட்டரில் அடிப்பது என்றால் அதற்கு தாளில் எழுதுவதை விட 2 மடங்கு நேரம் பிடிக்கும். வேகமாக அடிக்கும் விதத்தில் டைப்ரைட்டரை மாற்றி அமைத்தது எடிசன்தான்.
84-வது வயதில் எடிசன் இறக்கும் வரை தனது ஆராய்ச்சிக் கூடத்தில் தான் இருந்தார். இவர் இறந்தபோது, மின்விளக்கின் பயன்பாடு பற்றி மக்களுக்கு புரியும் விதத்தில் மின்விளக்குகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால், எப்படி இருந்திருக்கும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதத்தில் நாடு முழுவதும் மின் விளக்குகளை ஒரு நிமிடம் நிறுத்தி, எடிசனுக்கு மரியாதை செலுத்தியது, அமெரிக்கா.
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
பதிலளிநீக்குwww.cineikons.com