கருமுட்டை தானம்



           கண் தானம், ரத்த தானம் போல் இப்போது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கரு முட்டை தானமும், விந்து தானமும் வந்துவிட்டன. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். கரு உருவாதல் என்பது பெண்ணின் கருமுட்டை, ஆணின் உயிர் அணு என்ற இரண்டையும் மையமாக கொண்டே செயல்படுகிறது. இதில் ஏதாவது ஒன்று செயல்படாவிட்டாலும் கரு உருவாவதில்லை. இப்போது கரு முட்டையில் பாதிப்புள்ள பெண்கள் வேறு பெண்ணிடம் இருந்து கரு முட்டையை தானமாகப் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
            எல்லா பெண்களின் சினைப்பையும் மாதந்தோறும் கருமுட்டையை உற்பத்தி செய்து, கரு உருவாக்கத்திற்காக அனுப்பி வைக்கும். மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொள்ளுதல், கருத்தடை சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்தி குழந்தைப்பேறை தள்ளிப்போடுதல், 45 வயதை அடைவதற்குள்ளாகவே மாதவிலக்கு நிரந்தரமாக நின்று போதல், புற்று நோய் போன்றவற்றால் சினைப்பைகள் அகற்றப்பட்ட நிலை ஆகிய காரணங்களால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
           இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க, கருமுட்டை தானத்துடன் கூடிய குழந்தைப்பேறு சிகிச்சை முறை இப்போது புகழ் பெற்று வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைப் பேறு இல்லாத இல்லாத பெண்களுக்கு, தெரிந்த அல்லது உறவில் உள்ள திருமணமான பெண்களிடம் இருந்து கருமுட்டை தானமாகப் பெறப்படுகிறது. கருமுட்டைகளை தானமாக அளிக்க அந்த பெண்ணுக்கு திருமணமாகி குழந்தை இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பெண் தனது கருமுட்டையை தானமாக கொடுக்க ஒப்புக்கொண்டவுடன், அவரது மாதவிலக்கின் 2 வது நாளில் இருந்து கரு முட்டைகளை ஊக்குவிக்கும் ஹார்மோன் ஊசிகள் போடப்படும். தானமாக கொடுக்கப்படும் பெண்ணின் சினைப்பை உள்ளிட்ட உள் உறுப்புகள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பரிசோதிக்கப்படும். ரத்தப் பரிசோதனைகளும் உண்டு.


           கருமுட்டை போதிய அளவுக்கு உற்பத்தியாகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவையான அளவுக்கு உற்பத்தியானவுடன் கருமுட்டையை தானம் கொடுக்கும் பெண்ணை மருத்துவமனைக்கு வரவழைத்து நல்ல முதிர்ந்த நிலையில் உள்ள 5 அல்லது 6 முட்டைகளை ஊசி மூலம் வெளியே எடுப்பார்கள். எடுக்கப்பட்ட முட்டைகள் பரிசோதனை செய்யப்படும். அதன்பின் அந்த முட்டைகளை குழந்தைக்காக சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவருடைய உயிர் அணுக்களை எடுத்து பரிசோதனைக் கூடத்தில் சேர்த்து சோதனைக்குழாயில் கரு உருவாக்கப்படும்.
           இவ்வாறு உருவாக்கப்பட்ட கரு தொடர்ந்து 5 நாட்கள் கண்காணிக்கப்படும். அதன்பின் மிகவும் துடிப்புடன் இருக்கும் கரு, பெண்ணின் கர்ப்பப்பையில் பதியம் செய்யப்படும். சோதனைக்குழாய் சிகிச்சை முறையில் அந்த பெண்ணுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். இந்த கரு முட்டை தானத்தால் வருங்காலத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்து போகும்.
                                    ---------------------------------------------------

0 comments:

கருத்துரையிடுக