தமிழக கோவில்கள்

                     கோவில்கள் தேசத்தின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்று. உலகிற்கு தமிழகம் தந்த நன்கொடைகளில் கோவில் கலையும் ஒன்று.
                  ஆகம நெறியை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட கட்டிட சிற்ப நெறியே கோவில் கலை. மதுரை, தஞ்சை, காஞ்சி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற நகரங்கள் பலவற்றிலும் இந்த கோவில் கலை சிறந்து விளங்குகிறது. தமிழர்களின் பெருமிதமாக நிமிர்ந்து நிற்கிறது.

                    கோபுரங்கள், கலசங்கள், கொடி மரங்கள், விமானங்கள், பிரகாரங்கள், கோட்டங்கள், கருவறைகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபடு உபகரணங்கள், ஆடை-அணிகள் என்று பன்முகம் கொண்டு விளங்குகிறது, கோவில்கலை. உண்மையில் ஆலயங்கள் ஆய்வுக்களஞ்சியங்கள் என்று வர்ணிக்கப்படுகின்றன. கோபுர கலசங்கள், பிரகார தூண்கள், விழாக்கால வாகனங்கள், தீபாராதனை தட்டுகள், துவார பாலகர்கள் என்ற ஒவ்வோர் அம்சமும் ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு விரிவான பொருளையும், ஆழமான கருத்துக்களையும் கொண்டு திகழ்கின்றன.
                   
கோபுரங்கள் என்பது கோவில் வாயில்களில் எழுப்பப்படும் உயரமான அமைப்பு. இவை கம்பீரமான தோற்றம் கொண்டவை. இவற்றின் கலசங்கள் மங்கல சிறப்புடையவை மட்டுமல்ல, அறிவியல் ரீதியாக இடிதாங்கியாகவும் பயன்படுகின்றன.
                       சோழ, பாண்டிய, நாயக்கர் கால கட்டுமானங்களை கொண்டவை. கோபுர சிற்பங்களில் சுதை உருவமும் ஓர் அம்சமாகும். இது தமிழக கோபுரங்களில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளன.
 உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிழக்கு கோபுரத்தில் 1011 சுதை உருவங்களும், தெற்கு கோபுரத்தில் 1511 சுதை உருவங்களும், மேற்கு கோபுரத்தில் 1124 சுதை உருவங்களும், வடக்கு கோபுரத்தில் 404 சுதை உருவங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் கோபுரமே மிக உயர்ந்தது.
                கோவில் பிரகாரங்கள் அற்புதமான அழகுடையவை. கருவறையை வலம் வரும் வண்ணம் சுற்றுப் பாதையை கொண்டது. அழகிய தூண்களும் அற்புத சிற்பங்களும் பரிவார தெய்வீக கோட்டங்களும் கல்வெட்டுகளும் இந்த பிரகாரங்களில் காணப்படும். ஒன்று, மூன்று, ஐந்து என்ற ஒற்றைப்படையில் பிரகாரங்களின் எண்ணிக்கை இருக்கும். அகமுக பயணத்தின் அடையாளமாகவே இப்பிரகாரங்கள் இருக்கின்றன.
                     
திருவிடைமருதூர் 5 சுற்றுகளையும், ஸ்ரீரங்கம் 7 சுற்றுகளையும் கொண்டுள்ளன. ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரம் உலகப்புகழ் மிக்கது.
கோவில்களின் தனிச் சிறப்புகளும் மிகவும் இனிமையானவை.
                      சிதம்பரத்தின் பொன்வேய்ந்த இரு சபைகளும் கனகசபை, சிற்சபை என்று அழைக்கப்படுகின்றன. சிதம்பர ரகசியமும், மதுரையின் பொற்றாமரைக்குளமும், திருவண்ணாமலையின் தீப தரிசனமும், கிரிவலமும், தஞ்சை பெரிய கோவிலும் உலக அளவில் நமது கோவில் கலையை கொண்டு சென்றுள்ளன.
                       உலகை நமது கலையின் பக்கம் ஈர்க்கும் அற்புத பெருமிதங்களாகவே கோவில்கள் விளங்குகின்றன.

1 கருத்து: