இதுதான் சாஸ்திர சமையலறை!

  மையல் அறை பெண்கள் அதிக நேரம் செலவழிக்க கூடிய இடம் என்பதால், அந்த அறையை சாஸ்திரப்படி அமைப்பது நல்லது. அப்போதுதான், அங்கே அதிகநேரம் புழங்கும் பெண்களின் மனநிம்மதி, ஆரோக்கியம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்றவை அதிகரிக்கும்.
    சமையல் என்பது ஒரு கலை என்றாலும் கூட, சரியான தென்கிழக்கு (அக்னி) மூலையில் சாஸ்திரப்படி அமைத்த சமையல் அறையானது நல்ல சுவையான உணவை தயாரிப்பதற்கான ஆர்வத்தை பெண்களிடையே வளர்க்கும். சமையல் அறையை சதுரமாக 8க்கு 8 சதுர அடி அல்லது 10க்கு 10 சதுர அடி அல்லது 11க்கு 11 சதுர அடி என்று அமைத்தால் மிகவும் சிறப்பு.

      இவ்வாறு தென்கிழக்கு மூலையில் அமைந்த சமையல் அறையில் அடுப்பையும் தென்கிழக்கு மூலையிலேயே அமைத்து, சமைப்பவர்களின் முகம் கிழக்கு திசையை பார்த்தாற்போல் இருப்பது போலிருக்க வேண்டும்.   
      சமையல் அறையின் வடகிழக்கு மூலையில் பாத்திரம் கழுவும் தொட்டியை அமைக்க வேண்டும்.  இந்த தொட்டி கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களை தாராளமாக ஒட்டி வரலாம். 
      ஒருசிலர் பாத்திரம் கழுவும் தொட்டி வடக்கு சுவரை தொடக்கூடாது என்றும், இன்னும் சிலர் கிழக்கு சுவரை தொடக்கூடாது என்றும் கூறுவார்கள். இப்படி அமைத்தால் சமையல் அறையின் வடகிழக்கில் சிறிது எடை கூடுவதால் எந்தவிதத் தீமையும் இல்லை. 
மேலும், இந்த சமையல் அறையின் கதவு வடகிழக்கில் வடக்கு பக்கத்தில் வருவதாலும், சமையல் அறையின் இதர பகுதிகளில் லாப்ட் மற்றும் ஷெல்ப்கள் வருவதாலும், அப்பகுதிகளில் வடகிழக்கு பகுதியைவிட மிக மிக அதிகமாக எடை இருக்கும். அதனால், பாத்திரம் கழுவும் தொட்டி வடக்கு, கிழக்கு சுவரை ஒட்டுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 
        அத்துடன், வடக்கு அல்லது கிழக்கு சுவரை ஒட்டாமல் சமையல் மேடையையும், பாத்திரம் கழுவும் தொட்டியையும் அமைப்பது மிகவும் சிரமமாகும். அப்படியே சிறிய இடைவெளிவிட்டு அமைத்தாலும் அது சின்ன சந்தில் அடிக்கடி ஸ்பூன், கரண்டி போன்றவைகள் கீழே விழுவதும், பல்லி, புழு, பூச்சிகள் ஊர்ந்து செல்வதற்கு வசதியாகவும் இந்த இடைவெளி அமைந்துவிடும். எனவே இந்த இடைவெளி தேவையில்லை.
சமையல் அறையின் உச்சப் பகுதியான வடகிழக்கில் சமையல் அறைக்கு வாசலை வைத்தபின்பு பின்வாசலை, தெற்குப் பகுதியில் கிழக்கை ஒட்டி ஏற்கனவே வடக்கில் உள்ள வாசலும் நேர்கோட்டில் வருவதுபோல் வைத்து கொள்ள வேண்டும்.  பின்வாசல் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதே இடத்தில் ஜன்னலை தெற்கு சுவன் கிழக்கை ஒட்டி உச்சத்தில் வைத்துக் கொள்ளலாம். 
         சமையல் அறையின் தெற்கு, மேற்கு சுவர்களில் லாப்ட் அமைத்து கொள்ளலாம்.  மேற்குச்சுவர் முழுவதுமே ஷெல்ப்கள், கப்போர்டுகள் அமைத்து கொள்ளலாம். தெற்குச்சுவரில் ஷெல்ப்கள், கப்போர்டுகள் அமைக்க விரும்புபவர்கள், பின்வாசல் அல்லது ஜன்னலுக்கு இடைஞ்சல் இல்லாமல் அமைத்துக்கொள்ள வேண்டும்.
சமையல் அறையை தென்கிழக்கு மூலையில் அமைக்க இயலாதவர்கள் வடமேற்கே மூலையில் அமைத்துக்கொள்ள வேண்டும். 

        மொத்தத்தில் தென்கிழக்கு மூலையில் சாஸ்திரப்படி அமைந்த சமையல் அறையே முதலிடம் பெறும்.  எக்காரணம் கொண்டும் வடகிழக்கு மூலையில் சமையல் அறையை அமைக்கக்கூடாது.  வடகிழக்கு மூலையில் சமையல் அறையை அமைத்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் அழகு கெடும். எவ்வளவு வருமானம் வந்தாலும் போதாது. பொருளாதார நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். 
அதனால் சாஸ்திர சிறப்புடன் சமையல் அறையையும் அமைத்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுங்கள்.
 


1 கருத்து: