தென்னிந்தியாவின் முதல் ஸ்டூடியோ
தென் இந்தியாவில் ஒரு இந்தியரால் கட்டப்பட்ட முதல் சினிமா தியேட்டர் கெயிட்டிதான். சென்னையில் 1913-ல் கட்டப்பட்டது. இந்த தியேட்டரை ஆர்.வெங்கையா என்பவர் கட்டினார். சினிமாவின் மீது தீவிர பற்று கொண்டிருந்த இவர், ஒரு ஸ்டுடியோவை நிர்மாணிக்க எண்ணினார்.
அதற்காக தனது மகன் ரகுபதி பிரகாசை சினிமாவில் தேர்ச்சி பெற லண்டனுக்கு அனுப்பிவைத்தார். 1919-ல் லண்டனை அடைந்த பிரகாஷ் அங்கிருந்த 'பார்க்கர் மோஷன் பிக்சர்ஸ்' என்ற ஸ்டூடியோவில் 500 பவுண்டு பணம் கட்டி சேர்ந்தார். ஆனால் இந்தியரான இவருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க யாரும் முன்வரவில்லை.
இனவெறி உச்சத்தில் இருந்த காலம் அது. கட்டிய பணத்திற்கு கற்றுத்தர ஆட்கள் இல்லையென்றாலும் பிரகாஷ் மனம் தளரவில்லை. ஆர்வத்துடன் எல்லா பணிகளையும் கூர்ந்து கவனித்து கற்றுக்கொண்டார். ஒரு வருடம் லண்டனில் பயிற்சி பெற்று, பின்னர் பாரீசுக்கு சென்று பல பட நிறுவனங்களில் ஸ்டூடியோக்களை பார்த்துவிட்டு சென்னை திரும்பினார். இங்கிலாந்தில் தான் பார்த்தது போன்ற ஒரு ஸ்டூடியோவை சென்னையில் உருவாக்க விரும்பினார்.
ராக்சி தியேட்டரின் பின்புறம் ஒரு லட்ச ரூபாய் செலவில் 'ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்' என்ற ஸ்டூடியோவை உருவாக்கினார். அன்று இந்தியாவில் இருந்த மற்ற ஸ்டூடியோக்களை விட இவரது ஸ்டூடியோ நவீன வசதிகள் கொண்டதாக அமைந்திருந்தது. ஒரு லேப்பும் அதனுடன் இணைந்திருந்தது. படமெடுக்கும் தளம் கண்ணாடி கூரையால் மூடப்பட்டிருந்தது. இந்த கூரையின் மீது கறுப்புத்துணி போர்த்தப்பட்டிருந்தது. இதை திறந்து மூடி வெளிச்சத்தை கட்டுப்படுத்திக்கொள்ள வசதி இருந்தது.
மின்சார வசதியிருந்தாலும் அன்றைக்கு சீரான மின்சாரம் கிடைக்காது. அதனால் 'ஆர்க்' விளக்குகளே பயன்படுத்தப்பட்டு வந்தன.
1921-ல் 12 ஆயிரம் ரூபாய் செலவில் 'பீஷ்மபிரதிக்ஞை' என்ற சினிமா எடுத்தனர். அந்த சினிமா சுமார் 60 ஆயிரம் ரூபாய் லாபம் பெற்றுத்தந்தது. அதனை தொடர்ந்து 'கஜேந்திர மோட்சம்', 'பக்தநந்தன்', 'சமுத்திரவதனம்' போன்ற பல படங்களை இயக்கி தயாரித்தார் பிரகாஷ்.
இந்த ஸ்டூடியோ தான் தென்னிந்தியாவில், குறிப்பாக சென்னையில் சினிமா காலூன்ற அடிகோலியது. திரையுலகில் ஜொலித்த ஒய்.வி.ராவ், சி.புல்லையா போன்றவர்கள் சினிமாவை கற்றுக்கொண்டது, இந்த ஸ்டூடியோவில் தான்.
குறுகிய காலத்தில் மிகவும் புகழ்பெற்று உச்சாணிக்கு சென்ற 'ஸ்டார் ஆப் தி ஈஸ்ட் ஸ்டூடியோ' அதே வேகத்தில் கீழே விழுந்தது. 'பீஷ்மபிரதிக்ஞை' படத்திற்குப்பின் எடுத்த மற்ற படங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், நிறுவனம் கடன் சுமையில் தத்தளித்தது. 1923-ல் ஸ்டூடியோ ஜப்தி செய்யப்பட்டது. தான் உருவாக்கிய ஸ்டூடியோ கையைவிட்டு போன பின்னரும் கூட பிரகாஷ் சினிமாத்துறையில் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
---------------------------------------
0 comments:
கருத்துரையிடுக