எக்ஸெல் டிப்ஸ்



       ஒர்க்ஷீட்டில் நாளைய தேதி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும்.
              அந்த பார்முலா = TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.
விருப்பப்படி பிரித்து பிரிண்ட் செய்திட:
      பலவிதத் தகவல்களுடன் ஒரு பெரிய ஒர்க்புக் ஒன்றை எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கி இருக்கிறீர்கள். இதனை அச்சுக்கு அனுப்புகையில், ஒத்த தகவல்கள் ஒரே பக்கத்தில் பிரிண்ட் செய்யப்பட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என விரும்புகிறீர்கள். எடுத்துக் காட்டாக ஓரிடத்தில் கொள்முதல் பொருட்கள் குறித்த தகவல்கள் பத்து வரிசையில் உள்ளன. ஆனால் அச்சிடுகையில் அவை மூன்று, ஏழு என பிரித்து அச்சிடப்படுகிறது. இவை அனைத்தையும் ஒரே பக்கத்தில் கொண்டு வர விருப்பம் இருந்தால் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
      இதற்கு எந்த வரிசை அடுத்த பக்கத்திற்குத் தள்ளப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அந்த வரிசையில் கர்சரை வைத்து பின் "Insert" தேர்ந்தெடுத்து அதில் "Page Break"  பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த செல் உள்ள வரிசையின் மேலாக புள்ளிகளால் ஆன ஒரு கோடு அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இந்த வரிசை அச்சில் அடுத்த பக்கத்திற்குச் செல்லும் என்பதைக் காட்டவே இந்த கோடு அங்கு உருவாக்கப்படுகிறது. ஆனால் இந்த கோடு அச்சில் வராது.
எக்ஸெல் ஆல்ட்+ஷிப்ட்:
      இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT :திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT :ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT :மைக்ரோசாப்ட் ஸ்கிரிப்ட் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
ஒர்க் ஷீட் செலக்ஷன் :
       உங்களிடம் மிகப் பெரிய எக்ஸெல் பைல் உள்ளதா? அதில் நிறைய ஒர்க்ஷீட்கள் உள்ளதா? இவற்றில் நீங்கள் பயன்படுத்த விரும்புவதை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஷீட்களின் ஊடாக முன்னும் பின்னும் செல்கிறீர்கள். இது நிச்சயம் எரிச்சலைத் தரும். அல்லது Ctrl + Page Up / Down என்ற கீ வரிசைகளைப் பயன்படுத்துகிறீர்கள். இந்த வழியிலும் நீங்கள் விரும்பாத பழைய ஒர்க் ஷீட்களில் தான் சென்று நிற்பீர்கள். இதைத் தவிர்த்து விரைவாக ஒர்க் ஷீட்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்? இரண்டு மவுஸ் கிளிக்குகளில் தேவைப்படும் ஒர்க் ஷீட்டிற்கு எப்படிச் செல்லலாம்? இதோ ஓர் எளிய வழி. ஒர்க் ஷீட்டில் படுக்கை வசமாக உள்ள ஸ்குரோல் பாரைப் பாருங்கள். அங்கே ஒவ்வொரு ஷீட்டாகாத் தாவிச் செல்ல அம்புக்குறிகள் உள்ளனவா? அங்கு மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது ஒவ்வொரு ஒர்க் ஷீட்டின் பெயருடன் ஒரு மெனு தோன்றும். இப்போது அந்த மெனுவில் நீங்கள் எந்த ஒர்க் ஷீட்டை விரும்புகிறீர்களோ அங்கு கிளிக் செய்து அதனைப் பெறலாம். எவ்வளவு ஈஸி பார்த்தீர்களா!
                                                            ----------------

              கம்ப்யூட்டருக்கு புதியவரா! (மானிட்டர் பிரச்னை)

 மானிட்டர் பிரச்னை

      கம்ப்யூட்டர் சரியாக இயங்கினாலும், மானிட்டர் தகராறு செய்தால் நம் கதி அதோ கதி தான். அவசரமாகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுகையில் மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுவதுடன், பொறுமையிழந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பதட்டமடைவோம். மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கம்ப்யூட்டர் பணியை முடிக்கலாம். மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்; அல்லது பழைய கம்ப்யூட்டரில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம்.
  ஆனால் மானிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது. உபரியாக ஒன்று வைத்துக் கொள்ள முடியாது; ஏனென்றால் இடம், விலை நமக்குக் கட்டுபடியாகாது. மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
      உங்கள் கம்ப்யூட்டர் நன்றாக இயங்கி மானிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.
1. முதலில் மானிட்டருக்குச் செல்லும் மின்சாரம் இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய கம்ப்யூட்டர் மற்றும் மானிட்டராக இருந்தால் கம்ப்யூட்டரின் சிபியூவில் இருந்தே மானிட்டருக்கு பவர் கேபிள் செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும். எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திதிப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மானிட்டர் எனில், அதற்கு தனியே பவர் லைன் பிளக் கார்ட் இருக்கும். அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் இருந்தால் அது ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள, ஒரு சிறிய எல்.இ.டி. லைட் இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மானிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, ஆனால் கம்ப்யூட்டரின் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.
2. அடுத்ததாக உங்கள் மானிட்டரில் டிவியில் பிரைட்னஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் கொடுத்திருப்பார்கள். இதனை அட்ஜஸ்ட் செய்து பார்க்கவும். சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள் இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மானிட்டர் சரியாகலாம்.
3. அடுத்ததாக மானிட்டருக்கு வரும் விடியோ கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.
4. இன்னொரு மானிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால், அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். விடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்கவில்லை என்றால் விடியோ கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.
5. முடியுமென்றால், சந்தேகத்திற்குரிய மானிட்டரை இன்னொரு கம்ப்யூட்டரில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மானிட்டர் வேலை செய்திடவில்லை என்றால் மானிட்டரில்தான் கோளாறு இருக்கிறது என்பது உறுதியாகிறது. கம்ப்யூட்டரில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மானிட்டருக்குப் பதிலாகப் புதிய மானிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும். அல்லது நல்ல டெக்னீஷியனாகப் பார்த்து மானிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.
6. இன்னும் சில வழிகளில் மானிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போதும் பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் கன்னா பின்னா என்று தெரியும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய டிஸ்பிளே கார்ட் சரியில்லை என்று பொருள். இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய டிஸ்பிளே கார்ட் பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான். புதிய டிஸ்பிளே கார்டுக்கும் மானிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மானிட்டரை மாற்றுங்கள்; அல்லது ரிப்பேர் செய்திடுங்கள். புதியது வாங்குவது என முடிவு எடுத்துவிட்டால் செகண்ட் ஹேண்ட் மானிட்டரை வாங்க வேண்டாம். அதே போல் புதிய மானிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மானிட்டரை வாங்குங்கள். எடுத்துக்காட்டாக தற்போது தட்டையான எல்.சி.டி. மானிட்டர்கள் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கவும்.
                                                                  ---------------

0 comments:

கருத்துரையிடுக