சிறுகதை மன்னன் ஆண்டன் செகா

              உலக இலக்கியங்களில் ஷேக்ஸ்பியர் என்றால் நாடகம், ஷெல்லி என்றால் கவிதை இப்படி ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் இருக்கிறது. அப்படி உலக அளவில் சிறுகதை என்றாலே இலக்கியவாதிகள் நினைவுக்கு வருபவர், ஆண்டன்செகா.
              ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவிற்கு அருகே உள்ள ஒரு சிற்றூரில் 1860-ம் ஆண்டு ஜனவரி 29-ல் பிறந்து, 44 வயது வரை வாழ்ந்த செகா 584 சிறுகதைகள் எழுதியுள்ளார். 12 நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் முதன்முதலில் எழுதியது நாடகம் தான். ஏனோ நாடகம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனால் சிறுகதையை தேர்ந்தெடுத்தார்.
              ஆண்டன் செகா ஒரு முழுநேர டாக்டர். தனது மருத்துவ வேலைக்கு இடையே பல உன்னத படைப்புகளையும், கவிதைகளையும் எழுதினார்.
பொதுவாகவே நல்ல படைப்பாளிகள் பலரது வாழ்வு குழந்தைப்பருவத்தில் சோதனை நிறைந்ததாகவே இருக்கிறது. அதுபோன்று செகாவின் குழந்தைப்பருவமும் துன்பம் நிறைந்தே இருந்தது. செகாவின் மூதாதையர்கள் அடிமைகளாக இருந்தவர்கள். செகாவின் தாத்தா தான் முதலில் பணம் கொடுத்து வெளியில் வந்தவர்.
               செகாவின் தந்தை அவரை குதிரையை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பினார். மாஸ்கோவின் குளிரில், எந்த கம்பளி ஆடைகளும் இன்றி செகா வேலை பார்த்தார். தனது கடின உழைப்பால் படித்து மருத்துவரானார். இளமையில் அவர்பட்ட அவஸ்தைகள், பின்னாளில் படைப்புகளாக அவதாரம் எடுத்தன.
                இப்போது செகாவின் 150-வது ஆண்டுவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். பாரீஸ் நகர வீதியில் சிலர் கழுத்தில் ‘செகாவை சந்தியுங்கள்’ என்று போர்டோடு இருப்பார்கள். அவர்களிடம் சென்றால் அவர்கள் ஒரு நாற்காலியில் உட்காரவைத்து செகாவின் சிறுகதை ஒன்றை வாசித்துக் காட்டுகிறார்கள். 3  நிமிடம் கழித்து கதை முடிந்ததும், “செகாவின் கதையை கேட்டீர்கள்; நன்றி” என்று கூறி வழியனுப்புவார்கள். இப்படி உலகம் முழுவதும் செகாவின் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
செகா எழுதிய கதைகள் 26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 15 சிறுகதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளன.
                தெருவில் நடந்து செல்லும் ஒரு மனிதனை ஒரு நாய் கடித்து விடுகிறது. அந்த வழியே செல்லும் அனைவரும் நாயை கூட்டி வந்தவனை திட்டித் தீர்க்கின்றனர். சற்று நேரம் கழித்து அந்த நாய் ராணுவ ஜெனரலின் நாய் என்று தெரிகிறது. உடனே அனைவரும் நாய் மீது தவறில்லை, கடிபட்ட மனிதன் மீது தான் தவறு என்று மாற்றி பேசுகிறார்கள்.
                மனிதர்களின் மனம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவதை தனது பச்சோந்தி என்ற இந்த கதையில் செகா அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். அவரது 150-வது ஆண்டுவிழாவில் அவருடைய கதைகளை படிப்பதே அந்த மாபெரும் படைப்பாளிக்கு நாம் செய்யும் மரியாதை.
                                       -------------------------------------------

1 கருத்து:

  1. ஆண்டன் செகா பற்றி இதுவரை அறிந்ததில்லை. உங்களது பதிவின் மூலம், இவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி. :)

    பதிலளிநீக்கு