ஆபத்தாகும் காதுக்கான 'பட்ஸ்'

'ட்ஸ்' என்ற காட்டன் குச்சிகளின் விபரீதம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 'பட்ஸ்' மூலம் காதுகுடைவதை சிலர் நாகரீகத்தின் அடையாளமாக கருதுகிறார்கள். இது தவறான எண்ணம். காதில் சேரும் 'குரும்பி'யை எடுக்க வேண்டும் என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் டாக்டரிடம் செல்வது தான் சிறந்தது.
காது 'குரும்பி'யை எடுக்க மூன்று வழிகள் இருக்கின்றன. எந்த முறையை கையாள வேண்டும் என்பது நோயாளியை பொறுத்து தீர்மானிக்க வேண்டிய முடிவு. சிலருக்கு காதின் வெளிப்புறத்திலேயே நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படியான இடத்திலேயே 'குரும்பி' உருண்டையாக திரண்டு நிற்கும். அப்படியிருந்தால் அதை ‘ஊக்கு' போன்ற அமைப்பின் மூலம் வெளியே எடுத்து விடலாம். இதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.
ஊக்கை காதுக்குள் செலுத்தும்போது கூச்சத்தில் கொஞ்சம் அசைத்துவிட்டாலும் பிரச்சினைதான். அப்படிப்பட்டவர்களுக்கு மயக்கம் கொடுத்தபிறகுதான் வெளியில் எடுக்க வேண்டும். சிலருக்கு கொஞ்சம் உட்புறமாக காது 'குரும்பி' ஒட்டிக்கொண்டு இருக்கும். இவர்களின் காதில் சொட்டு மருந்தோ அல்லது தேங்காய் எண்ணையையோ போட்டுவிட்டால் 'குரும்பி' அதில் ஊறி தானாகவே வெளியில் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி வரவில்லையென்றால் டாக்டர்கள் நோயாளிக்கு மயக்கம் கொடுத்து 'மைக்ராஸ்கோப்' உதவியோடு அந்த 'குரும்பி'யை எடுத்துவிடுவார்கள். 'குரும்பி'யை உறிஞ்சி வெளியில் எடுக்கவும் கருவிகள் உள்ளன.
இன்னொரு முறையும் உள்ளது. 'சிரிஞ்ச்' மூலம் காதுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது தான் அது. காதுக்குள் நேரடியாக என்றில்லாமல் சற்று ஓரமாக தண்ணீரை பீய்ச்ச வேண்டும். செவிப்பறை வரை சென்று திரும்பும் தண்ணீர் வழியில் ஒட்டிக்கிடக்கும் காது குரும்பியை எல்லாம் அடித்துக்கொண்டு வந்துவிடும்.
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் காதுக்குள் செலுத்தப்படும் தண்ணீரின் வெப்பநிலை உடல் வெப்பநிலைக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் நோயாளி மயக்கம் போட்டு கீழே விழும் வாய்ப்பும் இருக்கிறது. காரணம், இந்த வெப்பநிலை வேறுபாடு நமது உடல் இயக்கத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் உள்காது நரம்புகளை தூண்டுவதுதான்.


தண்ணீர் மட்டுமல்ல, அதிக குளிர்ச்சியான அல்லது வெப்பமான காற்றுகூட நம்காதுக்குள் போகும்போது மயக்கம் வந்து நாம் நிலைதடுமாறி விழ வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு காது 'குரும்பி'யை எடுக்க ஊக்கை காதுக்குள் நுழைத்தாலே இருமல் வந்துவிடும். சிலர் மயங்கி விழுந்து விடுவார்கள்.
இதற்கு காரணம், இதயம் போன்ற முக்கியமான உடற்பாகங்களோடு தொடர்பு கொண்டு இருக்கும் 'வேக்ஸ்' நரம்பு தூண்டப்படுவதுதான். வெளிக்காதில் தோலுக்கு அடிப்புறமாக இருக்கும் இந்த நரம்பு மீது லேசாக ஏதாவது பட்டாலே அது தூண்டப்பட்டுவிடும். இப்படி நோயாளிகளுக்கு இருமலோ, மயக்கமோ வரும் பட்சத்தில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோடு அவர்களை கையாள வேண்டும். இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் காதில் 'குரும்பி'யை எடுக்க வேண்டும் என்றால் டாக்டரிடம் செல்வது தான் நல்லது.
அதைவிட்டுவிட்டு இதற்கெல்லாம் கூடவா டாக்டர்களிடம் போவார்கள் என்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது அதிகப்படியான மருத்துவ செலவை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், டாக்டர்கள்.
                                -------------------------------------------------

0 comments:

கருத்துரையிடுக