பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்கணுமா?
நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். வாழ்வில் தினமும் பலரைச் சந்திக்க வேண்டியது உள்ளது. குறைந்தபட்சம் கடை வியாபாரிகள், நண்பர்களையாவது சந்திக்கிறோம். தொழில் விஷயமாக புதிய மனிதர்களையும் சந்திக்கலாம்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் ஏய்த்துப் பிழைப்பவர்கள் ஏராளம். நல்லவர்கள் போல் பேசுவார்கள் இறுதியில் காலை வாரிவிடுவார்கள். நம்பிக்கையுடன் சீட்டுக் கட்டி, ஏமாந்தவர்களின் செய்தியைப் படிக்கிறோம், புன்னகை பூத்த முகத்துடன் அக்கா, அண்ணேன்னு உரிமையோடு பேசுகிறவரிடம் வாங்கிய பொருள் தரமற்றும், உடைசலாகவும் இருப்பதை பார்த்து மனம் புழுங்குகிறோம் இல்லையா?
இன்னும் எத்தனையோ விதங்களில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அதுபோன்ற போலி மனிதர்களை சந்திக்க நேரலாம். அவர்களை சாதுரியமாக கண்டுபிடித்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதோ சில வழிகள்...
* பொய் பேசுபவரின் பேச்சில் சில மாற்றங்களை உணரலாம். குறிப்பாக அவர்களின் சத்தத்தில் முன்பைவிட மாறுதல் இருக்கும். அவர்கள் பேசும் விஷயத்தில், பொய் வரும் இடத்தில் அழுத்தம் கூடுதலாக இருக்கும் அல்லது அதை திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேசுவார்கள். வியாபாரிகள் என்றால் ஒரே விலையை குறி வைப்பதுபோல மீண்டும் மீண்டும் கூறுவார்கள். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பேசுவதன் மூலம் அவர் சொல்ல வரும் விஷயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
* ஆனால், அல்லது, தவிர, அப்படியிருக்க போன்ற வார்த்தைகளை பொய் பேசுபவர்கள் தவிர்த்துவிடுவார்கள். ஏனெனில் இதெல்லாம் அவர்களின் நோக்கத்தை தடுக்கும் வார்த்தைகள் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் 'நான், எனக்கு, என்னுடைய' போன்ற வார்த்தைகளையும் குறைவாக உபயோகிப்பார்கள். அதிகமாக கட்டுக்கதைகளைச் சொல்வார்கள், இணைப்பாக தங்களது சொந்த சங்கேத சொற்களையும் இடைஇடையே உச்சரிப்பார்கள்.
* அவர்களிடம் எந்த விஷயத்தைப் பேசினாலும் நமக்கு சாதகமாக முடித்து தருவதுபோல் பதில் தருவார்கள். முகத்தில் புன்னகையை தவழ விட்டிருப்பார்கள். ஆனால் உங்களைக் கடந்து செல்லும் அடுத்த நிமிடம் 'இரு உன்னை கவனிச்சுக்கிறேன்' என்று மனதிற்குள் எண்ணியபடி நகருவார்கள். அப்படிச் செய்பவர்களை முக பாவனையை வைத்து எளிதில் கண்டு பிடிக்க முடியும். உணர்வுகளை மறைக்கும் தன்மை முகத்திற்கு கிடையாது. எவ்வளவு அடக்கினாலும் முகத்தில் லேசாகப் பிரதிபலிக்கும். உண்மை சிரிப்புக்கும், போலி சிரிப்புக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்தானே. அப்படியென்றால் அவர்களின் குட்டு உங்களிடம் எடுபடாது.
* பொய்யர்கள் போலியாக சிரிப்பார்கள். அதை நன்றாக கவனித்தால் கண்டுபிடிக்கலாம். அதை நீங்கள் கண்டுபிடிப்பதுபோல் நடந்து கொண்டால் அவர்கள் இடத்தை காலி செய்ய தயாராகி நழுவ முயற்சிப்பார்கள். போலியாக சிரிப்பதுபோலவே பயப்படுவது, கோபப்படுவது, வெறுப்பதுபோல் நடிப்பது என்று எல்லாம் போலியாகவே செய்வார்கள்.
* அவர்களின் நடவடிக்கை மற்றவர்கள் முன்பு ஒருவிதமாகவும், யாருமில்லாத இடத்தில் மற்றொருவிதமாகவும் இருக்கும். அவர்களின் மனநிலை முகத்திற்கும் - உடலுக்கும், பேச்சு - சப்தத்திற்கும் ஒட்டாமல் தொடர்பின்றி தொங்கிக் கொண்டிருக்கும்.
* ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்ல வந்தாலும் அதில் சில விஷயங்களை மறைத்துவிடுவார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஏதாவது விவகாரமான கேள்வி கேட்டால் அதை கூர்ந்து கவனிப்பார்கள் ஆனால் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்பார்கள்.
'இன்று உங்களுக்காக பொய் சொல்பவர்கள், நாளை அவர்களுக்காக உங்களையே ஏமாற்றத் துணிவார்கள்' என்று சொல்வதுண்டு. எனவே பொய் பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!
----------------------------------
0 comments:
கருத்துரையிடுக