ராக்கெட்டின் தத்துவம் இதுதான்!
மனிதன் தன் வசதிக்காக பூமியில் இருந்து கொண்டே விண்வெளியை இயக்க உருவாக்கியதுதான் செயற்கை கோள்கள். இவற்றால் மனித முன்னேற்றத்திற்கு பல நன்மைகள் இருக்கிறது. செயற்கை கோள்கள் ஏவுவதில் இந்தியா வெற்றி பெற்று உள்ளது.
பூமியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கருவிகளுடனும், முக்கியமான மின்கலங்களோடும் செயற்கைக் கோள் உருவாகும்.
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸோலோசெல், சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றி மின்கலங்களின் வழியே செயற்கை கோளை அந்தரத்தில் செயல்பட வைக்கும்.
செயற்கைக் கோளின் முழு அமைப்பும் உருவாக்கியவுடன், இது கேரியர் எனப்படும் ராக்கெட்டில் இணைக்கப்படும். ராக்கெட்டின் அடிப்பகுதியில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து செயல்படும் அளவிற்கு எரி பொருட்கள் நிரம்பிய சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
சரியாக நேரம் வந்ததும், கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணில் ராக்கெட் சீறிப்பாயும்.
முதலில் நேராகச் செல்லும் ராக்கெட் புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மேலே செல்லச் செல்ல சாய்வாகப் பறக்கும்.
குறிப்பிட்ட இலக்கை அடைந்ததும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள செயல்பாட்டுக்கு ஏற்றபடி தேவையான வேகத்தோடு, செயற்கைக்கோளை சுற்றுப்பாதைக்கு அனுப்பிவிட்டு ராக்கெட் பிரிந்து சென்றுவிடும். சரியான சுற்றுப் பாதையை அடைந்ததும் செயற்கைக் கோள் தன் வேலையைத் தொடங்கி விடும். இப்படி முக்கியப் பங்காற்றும் ராக்கெட்டின் அடிப்படையை இங்கே தெரிந்து கொள்வோம்.
தீபாவளிக்கு நாம் விடும் ராக்கெட் மத்தாப்புப் பற்றி உங்களுக்குத் தெரியும். குவிந்த மணல் அல்லது பாட்டிலில் குத்தி வைத்து, நாம் பற்ற வைக்கும் தீ, சிறிய குழாய் மூலம் நெருப்பு பின்புறமாக பீறிடும்போது ராக்கெட் மேல்நோக்கி செல்லும்.
கடலில் ஒருவகை மீன் உள்ளது. இது தண்ணீரை குடித்துவிட்டு, அதை பின்பக்கமுள்ள உறுப்புகள் வழியாக பீய்ச்சி அடிக்கும். இதன் மூலம் அந்த மீன் முன்னோக்கி தள்ளப்படும். இதனால் அந்த மீன் நீந்தாமலேயே முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். இதுதான் ராக்கெட் இயங்கும் தத்துவம்!
விண்வெளியில் செயற்கைக் கோள்களைச் செலுத்தவும், மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லவும் பயன்படுத்தப்படுகிற ராக்கெட் அனைத்தும் இந்த அடிப்படையில்தான் செயல்படுகின்றன.
விண்வெளிப் பயணத்திற்கு ராக்கெட்டை மட்டும் பயன்படுத்துவது ஏன்?
விமானங்களை பயன்படுத்த முடியாது. ஏனென்றால் விமான எஞ்ஜின்களில் உள்ள எரிபொருள் எரிவதற்குக் காற்று தேவை. அதாவது காற்றில் உள்ள ஆக்ஸிஜன் அவசியம். ஆனால் ராக்கெட்டுகள் உயரே கிளம்பி காற்றே இல்லாத விண்வெளியில் இயங்கியாக வேண்டும். ஆதலால் தான் ராக்கெட்டுகளில் எரிபொருளுடன் ஆக்ஸிஜனையும் அளிக்கின்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது.
தவிர, விமானங்கள் மிகவும் உயரத்தில் பறப்பதற்கு காற்று தேவை. ஆனால் ராக்கெட்டுக்கு அந்த பிரச்சினை இல்லை. சில ராக்கெட்டுகளில் திட வடிவில் எரிபொருள் பயன்படுத்தப் படுகிறது. திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுகிறது. அதிக எடை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டுகளில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகியவற்றை திரவ வடிவில் கொண்டு செல்லப்படுகிறது. பல அடுக்கு ராக்கெட்டுகளில் வெவ்வேறு எரிபொருள் பயன்படுத்தப்படலாம்.
-----------------------------------------------------------------
0 comments:
கருத்துரையிடுக