மறுபிறப்பு
மறுபிறப்பு என்ற கருத்துக்கு மறுப்பும் உண்டு. ஆதரவும் உண்டு. மறுத்து கருத்துச் சொல்கிறவர்கள், அதற்கு ஆதாரமான கருத்துக்களைப் பெற விஞ்ஞான முறைப்படி நவீன மருத்துவம் கற்றவர்களைத்தான் தேடிச் செல்வார்கள்.
ஆனால் இதில் புதுமை என்னவென்றால், புகழ்பெற்ற மன நல மருத்துவர்களே தங்கள் சிகிச்சைகள் மூலம் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து மறுபிறப்பு இருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் பிரையன் எல்.வீஸ்.
இவர் 1966&ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று எம்.டி. பட்டம் பெற்றார். பின்பு மியாமி பல்கலைக்கழகத்தின் உளவியல் (சைக்கோ& பார்மகாலஜி) துறை இணை பேராசிரியர். புகழ்பெற்ற இந்த உளவியல் நிபுணரிடம் 1980-ம் ஆண்டு 27 வயதான கேத்தரின் என்ற பெண் சிகிச்சைக்கு வந்தாள். பயம், மனக்குழப்பம், கவலை போன்றவை மிக அதிகமாகி தன்னை தடுமாற வைப்பதாகச் சொன்னாள். அவளுக்கு அவர் கொடுத்த சிகிச்சைகள் எந்த பலனையும் அளிக்காதபோது, அவர் அவளை ஹிப்னாடிச நிலைக்கு கொண்டு சென்றபோதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.
அவள் ஆழ்ந்த உறக்க நிலையில் தன் பல்வேறு பிறப்பு எடுத்ததை, அந்தந்த பிறப்பு நிலைக்கு சென்று விளக்கினார். 25 பிறப்பிற்கு மேல் அவள் பிறந்துள்ளதை விளக்கினாள். அந்த பிறப்புகளில் ஆங்காங்கே அவளுக்கு கிடைத்த பாதிப்புகள் அப்படியே மனதில் பதிந்து, நோய் தன்மையாக பாதித்திருப்பதை உணர்ந்தார். பின்பு ஹிப்னாடிச நிலையிலே அவளை வைத்து அந்தந்த பிறப்பை புரியவைத்து அவளை மனதளவில் மேம்படுத்தினார். அந்த முன்ஜென்ம விஷயங்கள் கேத்தரின் வாழ்க்கையில் மட்டுமின்றி, டாக்டர் பிரையன் எல்.வீஸ் வாழ்க்கையிலும் சில உண்மைகளை உணரவைத்தது. அவர் தனது இத்தகைய அனுபவங்களை எல்லாம் புத்தகங்களாக்கினார். லட்ச கணக்கில் அந்த புத்தகங்கள் விற்பனையாகின.
பொதுவாக நமக்கு சரித்திர காலத்தில் உள்ள வாழ்க்கை முறை, போர், மக்கள் பிரச்சினை, நடை- உடை போன்றவை எல்லாம் குறிப்புகளாக, கல்வெட்டுகளாக, புத்தகங்களாக சற்று சிரமப்பட்டு புரியும் நிலையில்தான் கிடைக்கின்றன. ஆனால் எல்லாம் ஒரு திரைப்படம் போல் உயிரோட்டமான தொடர் காட்சிகள் போல் தெரிவதில்லை.
ஆனால் ஹிப்னாடிச நிலையில் தன் முன் பிறப்புகளைச் சொல்கிறவர்கள் அந்த ஆண்டு, அப்போது தன் பெயர், தான் அணிந்திருந்த ஆடை, அந்த கால வாழ்க்கை முறை, போர் முறை, உணவு முறை போன்ற அதிசயிக்கத்தக்க விஷயங்களை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையும், வரலாறும், கொள்ளை நோய்களும், சுனாமி போன்ற பேரழிவு தாக்குதல்களும் இன்றைய மனிதர்களுக்கு உணர்த்தப்படுகிறது என்பதை டாக்டர் பிரையன் எல்.வீஸ் தன் புத்தகங்கள் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை மட்டுமே நிஜம். இதற்கு பின்பு மரணம்தான். மரணத்திற்கு பின்பு எதுவுமே இல்லை. மரணம் நம்மை முழுமையாக அழித்துவிடுகிறது என்று நம்பும் மனிதன் மரண பயம் கொள்கிறான். மரணம் வரும் முன்பே அதை நினைத்து தினமும் அழத் தொடங்கிவிடுகிறான். ஆனால் அதே மனிதனை ஹிப்னாடிச நிலைக்கு கொண்டு சென்று அவனது முன்பிறப்புகளை எல்லாம் உணர்த்தும்போது, ‘அடடே நான் இதற்கு முன்பு இத்தனை பிறப்புகள் பிறந்திருக்கிறேனா? இப்போது இறந்தால் இனியும் பிறப்பேன்’ என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால் மரண பயம் நீங்கி விடுகிறது.
நமது உடல், கார் போன்றது. நமது ஆன்மா, அதன் டிரைவர். கார் துருபிடிக்கும். காலாவதியாகும். டிரைவர் மட்டுமே ஆன்மா போன்று நிரந்தரம் ஆனவர். துருப்பிடித்த, காலாவதியான காரை மாற்ற டிரைவர் தயாராக இருந்துதான் ஆகவேண்டும். கார் போன்ற உடலை மாற்றிக்கொள்ளும் இயல்பான விஷயம்தான் மரணம்.
மருத்துவ விஞ்ஞானம் நீரிழிவு, புற்றுநோய் போன்ற சில நோய்கள் மரபு வழியாக தாய் தந்தையரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. அதுபோல் முன்ஜென்மத்து மோசமான துயரங்களும், ஆழ்ந்த சோகங்களும், பயமும் மங்கிய நிலையில் புதிய ஜென்மத்திலும் சேர்ந்து வருகிறது. இந்த வாழ்க்கையில் அது போன்ற சோகமோ, பயமோ ஏற்படும்போது அது தன்னை நிரந்தரமாக தாக்கிவிடுமோ என்ற அச்சம் உருவாகிறது. அந்த அச்சம் இந்த ஜென்மத்து வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும்போது அவரை ஆழ்நிலைக்கு கொண்டுபோய், பழைய காரணங்களை கண்டறிந்து மனதை சரிசெய்வதற்கு ‘பாஸ்ட் லைப் ரெக்ரஷன் தெரபி’ என்று பெயர். அந்த தெரபியும் இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ஒருவரை ஆழ்நிலைக்கு கொண்டு சென்று, முன்ஜென்ம அனுபவங்களை பேச வைக்கும்போது அவரே படம் பார்ப்பவராகவும், அவரே ஹீரோவாகவும், அவரே அதை விமர்சிப்பவராகவும் இருக்கிறார்.
ஆறறிவின் அடையாளமே கேள்வி எழுப்புவதுதான்!
100 ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் முழுக்க சில கோடிகளில்தான் மக்கள் இருந்தார்கள். இப்போது மக்கள்தொகை 500 கோடியை தாண்டிவிட்டது. ஒரு உயிர் ஒரு ஆன்மாதானே அப்படியானால், முதலில் இருந்ததைப்போன்ற சில கோடி ஆன்மாக்கள் தானே இப்போதும் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான ஆன்மாக்கள் எங்கிருந்து வந்தன? என்பது ஒரு கேள்வி.
மரஞ்செடி கொடி, ஊர்வன, நடப்பன, நீந்துவன என எல்லாவற்றிற்கும் உயிர் இருக்கிறது. அப்படியானால் அத்தனைக்கும் ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் புல், பூண்டு, நண்டு, நத்தையாகத்தான் பிறக்குமா? & என்று இன்னொரு கேள்வி! இப்படி பல கேள்விகளை எழுப்பலாம். இதற்கு யார் விடை சொல்வது?
இப்படி ஒரு சப்ஜெக்டில் பாடமும் இல்லை. படித்தவர்களும்இல்லை. கற்றுக்கொடுக்க ஆசிரியர்களும் இல்லை.
இறந்த பின்பும் எல்லோரும் சமம்தான். இடைப்பட்ட வாழ்க்கைதான் படிப்பு, வேலை, பணம், பொருள், அந்தஸ்து போன்ற வேற்றுமைகளை உருவாக்குகிறது. சிலர் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், சிலர் காலம் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும் கருதுகிறார்கள். மறுபிறப்பு தத்துவம் அந்த விஷயத்திலும் நமக்கு மன ஆறுதல் தருகிறது.
இந்த ஜென்மத்தில் கஷ்டங்களை அனுபவிக்கும்போது அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அதே நேரத்தில், கஷ்டம்தானே வந்துவிட்டுப் போகட்டும். இந்த ஜென்மத்தில் கஷ்டங்கள் தீர்ந்துவிட்டால், அடுத்த ஜென்மத்தில் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நம்பலாம். இன்று கோடீஸ்வரர்களாக இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. முன்ஜென்மத்தில் நாம் அப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம் அல்லது அடுத்த ஜென்மத்தில் அப்படி ஒரு நிலையில் இருப்போம் என்று மனதை அமைதிப்படுத்திக்கொள்ளலாம்.
டாக்டர் பிரையன் எல்.வீஸ் குறிப்பிட்டிருக்கும் கேத்தரின் தனது முன்ஜென்மங்களில் ஆணாகவும் பிறந்திருக்கிறாள். உலகின் பல்வேறு நாடுகளிலும் பிறந்திருக்கிறாள். அரச குடும்ப பெண் முதல் விலைமாதர் வரை அவள் ஒவ்வொரு ஜென்மத்தில் ஒவ்வொரு மாதிரியாக வாழ்ந்திருக்கிறாள். சில நாடுகளில் பிறப்பை உணர்த்தியபோது அந்த நாட்டுமொழிகளில் பேசவும் செய்திருக்கிறாள். அதனால் ஆன்மாக்கள் நாடு, மொழி, இனம் போன்றவைகளை கடந்ததாக இருக்கிறது. இத்தனை கோடி மக்கள் இருந்தும், எவ்வளவோ வேற்றுமைகள் இருந்தும் மனித சமூகம் இன்றும் பெருமளவு அமைதியாக இருந்துகொண்டிருப்பதற்கு காரணம் இந்த ஆன்மாக்களின் அன்பு என்றும் எடுத்துக்கொள்ளலாமே.
-------------------------------------
0 comments:
கருத்துரையிடுக