குருவாயூரப்பா...குருவாயூரப்பா...
ஒரு சமயம்... நாராயணன் பிரம்மாவிற்கு ஒரு விக்கிரகத்தை கொடுத்தார். அதில் தனது சக்திகளை பொதித்து அளித்தார். பிரம்மன் அந்த விக்கிரகத்தைக் பாதுகாத்து, தனது படைப்புத் தொழிலை திறம்பட செய்து வந்தார்.
சுதபஸ், ப்ருஷ்னீ என்ற தம்பதியினர் குழந்தை வரம் பெற, பிரம்மனை வேண்டினர். அதன்படி பிரம்மன் அவர்களுக்கு காட்சி தந்து, நாராயண விக்கிரகத்தை அன்பளிப்பாக கொடுத்து அதை வழிபட செய்தார். அப்போது, அவர், உங்களுக்கு பிறக்கும் மகனுக்கு மூன்று பிறவிகள் உண்டு. இந்த விக்கிரகத்தை ஒவ்வொரு பிறவியிலும் பூஜை செய்து வர வேண்டும். இந்த மூன்று பிறவிகளிலும் நாராயணன் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன் என்று கூறினார்.
அதேபோல், முதல் பிறவியில் ப்ருஷ்ணீகர்பர் என்றும், இரண்டாவது பிறவியில், வாமனராகவும், மூன்றாவது பிறவியில் கிருஷ்ணராகவும் பிறந்தார்.
கம்சவதம் முடிந்ததும், கிருஷ்ணரே துவாரகையில் அந்த நாராயண விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார். அங்கு ஒரு கோவில் கட்டினார். அவருடைய அவதாரங்கள் முடிந்தது, வைகுண்டம் சென்றார்.
பூமியில் பிரளயம் ஏற்பட்டது.
துவாரகை வெள்ளத்தில் மூழ்கியது. கிருஷ்ணர் பூஜித்து வந்த விக்கிரகம் கடலில் மிதந்து வந்தது. அதைப் பார்த்த தேவர்களின் குருவான பிரகஸ்பதி அவருடைய சீடருடன் சேர்ந்து அதை மீட்டார். அதை வாயுபகவான் தன் தலை மேல் வைத்து சுமந்து வந்தார். குருபகவான் அதைப் பிரதிஷ்டை செய்ய இடம் தேடினார். அப்போது அந்த விக்கிரகத்தைத் தேடி அலைந்தார், பரசுராமர். வாயு, குரு இருவரும் விக்கிரகத்துடன் வருவதைக் கண்டார். நடந்தவற்றை அறிந்து, மூவரும் பிரதிஷ்டை செய்ய இடம் தேடி அலைந்தனர்.
தாமரைகள் பூத்து குலுங்கியது ஒரு குளம். அதன் பெயர் ருத்ரதீர்த்தம். குளத்தின் கரையில் சிவபெருமான்&பார்வதி அமர்ந்திருந்தனர். அவர்கள் அந்த இடத்தை அடைந்ததை சிவபெருமான் பார்த்தார். இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய இதுதான் சிறந்த இடம். நான் இந்த குளத்தின் மறுகரையில் உள்ள மம்மியூருக்குச் செல்கிறேன் என்றார் அவர். உடனே, அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால், அந்த இடத்திற்கு குருவாயூர் என்ற பெயர் வந்தது. அன்று முதல் குருவாயூரில் குடிகொண்ட நாராயணன் குருவாயூரப்பன் என்று அழைக்கப்பட்டார்.
தென்னகத்தின் துவாரகை என்று அழைக்கப்படுகிறது குருவாயூர். இது பாலக்காட்டில் இருந்து 86 கிலோமீட்டர் தூரமும், திருச்சூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரமும் உள்ளது.
அமைப்பு
கோவில் சதுரவடிவில் உள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் தலா இரு கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் வழியாக நுழைந்தால் சுற்றம்பலம் எனப்படும் வெளிப்பிரகாரம் உள்ளது. இங்கு தங்க முலாம் பூசப்பட்டு 100 அடி உயரத்தில் கொடிமரம் உள்ளது. கேரளாவின் சிறப்புமிக்க இசையான செண்டை மேளங்கள் முழங்குவதும் இங்குதான். அலங்காரம் செய்யப்பட்ட யானைகள் அழகாக அணிவகுத்து நிற்கும். இங்குள்ள தீபஸ்தம்பம் காண்பவர்களைக் கவர்ந்து இழுக்கும். இதில் வட்டவடிவில் 13 அடுக்குகள் உள்ளன.
------------
0 comments:
கருத்துரையிடுக