இந்திய மக்கள் தொகை
மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் சில மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. சில மாநிலங்களில் நடந்து வருகிறது. உலக பரப்பளவில் 2.4 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பு கொண்டுள்ள இந்தியா உலக மக்கள் தொகையில் 16 சதவீதத்தை பெற்றுள்ளது. 2000ம் ஆண்டு மே மாதம் இந்திய மக்கள் தொகை 100 கோடியை கடந்துவிட்டது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகை 102 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து436. ஆண்கள் 53 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 90. பெண்கள் 49 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 346 பேர். ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் உள்ளனர். ஒரு சதுர கி.மீ.க்கு 325 பேர் வசிக்கின்றனர். 64.89 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872&ல் நடத்தப்பட்டது. இருப்பினும் 1881&ல் தான் முழுஅளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போதைய ஆங்கிலேய வைசிராயான ரிப்பன் பிரபு தான் இதனை நடத்தினார். அப்போது பிளிண்டன் என்பவர் இந்தியாவின் முதல் சென்சஸ் கமிஷனராக இருந்தார்.
1881 முதல் 1941 வரை சென்சஸ் கமிஷனரே மக்கள்தொகை கணக்கெடுப்பு பொறுப்பு வகித்தவர். 1949 முதல் இந்த பொறுப்பு உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனரிடம் மாற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் ரெஜிஸ்டிரர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனராக இருந்தவர் எம்.டபிள்யூ.எம்.யேட்ஸ். இந்த பதவிக்கு வந்த முதல் இந்தியர் ஆர்.ஏ.கோபால்சாமி. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9&ந் தேதி மக்கள்தொகை தினமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 82 கோடியே 75 லட்சத்து 78 ஆயிரத்து 868 இந்துக்கள் உள்ளனர். 13 கோடியே 81 லட்சத்து 88 ஆயிரத்து 240 பேர் முஸ்லிம்கள். 2 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரத்து 16 பேர் கிறிஸ்துவர்கள். 69 லட்சத்து 601 பேர் பார்சிகள்.
இந்தியாவில் 23 மாநிலங்கள், 5 மத்திய ஆட்சி பகுதிகள் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளில் இந்துக்களே அதிகம் உள்ளனர். ஜம்மு&காஷ்மீர், லட்சத்தீவுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாகாலாந்து, மிசோரம், மேகாலயா போன்ற பகுதிகளில் கிறிஸ்துவர்கள் அதிகமாக உள்ளனர்.
பஞ்சாபில் சீக்கியர்கள் பெருமளவில் உள்ளனர். நாட்டில் அதிகமாக கிறிஸ்துவர்களை கொண்ட மாவட்டம் கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் ஆகும். அதிகமான முஸ்லிம்கள் உள்ள மாவட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டம் ஆகும்.
தாழ்த்தப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலம் பஞ்சாப். இங்கு 28.9 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டவர்களாக உள்ளனர். பழங்குடியினர் அதிகம் உள்ள மாநிலம் மிசோரம். இங்கு 94.5 சதவீதத்தினர் பழங்குடிகளே. மத்திய ஆட்சிப்பகுதிகளில், சண்டிகர் 17.5 சதவீத தாழ்த்தப்பட்ட மக்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. பழங்குடியினரை அதிகம் கொண்ட மத்திய ஆட்சிப்பகுதி லட்சத்தீவு. இங்கு 94.2 சதவீதத்தினர் பழங்குடியினர்.
-------------------
0 comments:
கருத்துரையிடுக