கிளாடியேட்டர் தெரியுமா?


              பண்டைய ரோமானியர்கள், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்காக சவ ஊர்வலத்தின்போது 2, 3 பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டபடியே செல்வார்கள். பிற்காலத்தில் அரசர்கள் தங்கள் குடிமக்களை சந்தோஷப்படுத்த இந்த சண்டையை ஒரு விழாவாகவே நடத்தத் தொடங்கினர்.
              இந்த சண்டைகளில் கலந்து கொள்பவர்களை கிளாடியேட்டர்ஸ் என்று அழைத்தார்கள். லத்தீன் மொழியில் கிளாடி என்றால் கத்தி என்று அர்த்தம். முதலில் கத்தியை மட்டும் தான் வைத்து சண்டை போட்டார்கள். காலப்போக்கில் கோடாரி, இரும்பு வளையம், கேடயம், வீச்சரிவாள், பழுக்க காய்ச்சிய இரும்பு போன்றவற்றை கொண்டு சண்டையிட்டனர்.
இவ்வாறு சிலர் சண்டையிடுவதையும் அதை பலர் அமர்ந்து பார்வையிடுவதற்காகவும் அமைக்கப்பட்ட இடமே கொலோசியம். ரோம் நகரில் கி.பி.முதலாம் நூற்றாண்டில் கொலோசியம் கட்டப்பட்டது.
              உலகில் இருக்கும் பிரம்மாண்டமான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. சுமார் 150 அடி உயரமும் நான்கு கேலரிகளையும் கொண்டது.  மைதானத்தை ஒட்டியிருக்கும் முதல் கேலரியில் மன்னரும், அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அமருவார்கள். இரண்டாவது கேலரியில் நிலப்பிரபுக்களும், நகரின் பிரபலமானவர்களும் இருப்பார்கள். மூன்றாவது கேலரியில் தொழிலாளர்கள் அமர்வார்கள். நான்காவது கேலரியில் பெண்கள் மட்டும் அமர்வார்கள்.
             கொலோசியம் என்றால் லத்தீன் மொழியில் மிக பிரமாண்டமான என்று பொருள். கிளாடியேட்டர் சண்டை நடக்கிறது என்றால் இருக்கும் வேலையெல்லாம் போட்டுவிட்டு எல்லோரும் கொலோசியத்தில் ஆஜராகிவிடுவார்கள். இதில் சண்டையிடுபவர்கள் பொதுவாக அடிமைகளாகவும், மரண தண்டனை பெற்ற கைதிகளாகவும் இருந்தனர். சாதனைக்காக சிலர் சண்டையிடுவதும் உண்டு.
                கிளாடியேட்டர் சண்டையில் ஒருவர்தான் வெல்ல முடியும். மற்றவர்கள் காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடப்பார்கள். மன்னர் கட்டைவிரலை உயர்த்திக்காண்பித்தால், அவர்கள் உயிர்பிழைப்பார்கள். மாறாக அவர் விரலை கீழ்நோக்கி காட்டினால், ஏற்கனவே பாதிப்பிணமாக இருக்கும் அந்த நபரை ஈட்டிகளால் குத்திக்கொன்று இழுத்துப்போடுவார்கள்.
மைதானத்தின் அடித்தளத்தில் புலி, சிங்கம், கரடி போன்ற விலங்குகள் பட்டினியோடு அடைக்கப்பட்டிருக்கும். அவற்றை சாட்டையால் அடித்து வெளியேற்றி மைதானத்திற்குள் அனுப்புவார்கள். அங்கு நிற்கும் கிளாடியேட்டர் அவற்றுடன் சண்டைபோட வேண்டும். ஏறக்குறைய அனைவருமே இறந்துதான் போவார்கள். தப்பித்தவறி யாரேனும் உயிர்பிழைத்தால் அவனை மாவீரனாக்கி, கைதியாக இருந்தால் விடுதலையும் கொடுத்து அனுப்புவார்கள்.
                 கொலோசியம் திறப்புவிழா கண்ட முதல் 100 நாட்களில் மட்டும் ஆயிரம் கிளாடியேட்டர்கள் இறந்துள்ளனர். இன்று சிதிலமடைந்து இருக்கும் கொலோசியம் தங்கள் பெருமைக்கு சான்று என்று அப்படியே பாதுகாத்து வருகிறார்கள்.
                                                  ------------------------------

0 comments:

கருத்துரையிடுக