ஆதிமனிதனின் ஆயுள்
சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மட்டும் 17 வகையான யானைகள் காடுகளில் இருந்தன. ஆனால் இன்று 2 வகை யானைகள் மட்டுமே உள்ளன. ஒன்று இந்திய யானை, மற்றது ஆப்பிரிக்க யானை. கங்கை நதியில் ஆயிரக்கணக்கான நீர்யானைகள் வசித்தன. இன்று உலகில் ஆப்பிரிக்காவில் மட்டுமே நீர்யானைகள் உள்ளன. இந்தியாவில் ஏராளமாக வசித்த நெருப்புக்கோழிகளும் இப்போது ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளன.
ஆனால் பருவமழை மட்டும் 20 லட்சம் வருடங்களாக தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. சுமார் 60 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனித இனம் இந்தியாவிற்குள் நுழைந்தது. அப்போதே இந்தியாவில் சில மனித இனங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நியாண்டர்தால் மனித எலும்புகள் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், இந்தியாவின் மராட்டியத்திலும் கிடைத்திருக்கின்றன. நியாண்டர்தால் மனிதனும், அவனுக்கு முந்தைய இனமாக ஹோமோ எரெக்டஸ் மனிதர்களும் உபயோகித்த கல் ஆயுதங்கள் இந்தியாவில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள அத்தரம்பாக்கம் பகுதியில் கூட கல் ஈட்டி கண்டுபிடிக்கப்பட்டது. 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் அவை.
இந்தியாவில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் மனித இனமும், 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வேறுவிதமான சில மனித இனங்களும் காடுகளில் வசித்ததற்கான தடயங்கள் உண்டு. அந்த மனிதர்களின் கோணத்தில் பார்த்தால், 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய மனித இனத்தினர் வடமேற்கிலிருந்து இந்தியாவுக்குள் வந்ததும் ஒரு படையெடுப்பு போலத்தான்.
மற்றவர்களை அழிக்க வேண்டும் என்ற வெறியும், ஆக்கிரமிப்பு மனப்பான்மையும், ஆதிமனிதர்களிடமே தோன்றிவிட்டன. இத்தனைக்கும் கி.மு.10 ஆயிரத்தில் மனிதர்களின் அதிகபட்ச ஆயுள் 30 ஆண்டுகள் தான். மிக அரிதாக ஒரு சிலர் மட்டும் 30 வயதுக்கு மேல் உயிர்வாழ்ந்துள்ளனர்.
பழங்கால இந்தியா இப்போது இருப்பதை விட மிகவும் பெரியதாக இருந்துள்ளது. மும்பை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, சென்னை, கொச்சி போன்ற எந்த நகரங்களும் கடற்கரையோரத்தில் இல்லை. இன்றைய மெரினாவில் இருந்து கடற்கரைக்குப்போக 500 முதல் 700 கிலோமீட்டர் கிழக்கு நோக்கி பயணிக்க வேண்டும். அப்படி சென்றால் தான் கடற்கரையே கண்ணில் தெரியும்.
மனிதர்கள் காலால் நடந்தே உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்றெண்ணி ஆண்டவன் கண்டங்களை இப்படி ஒன்றோடு ஒன்றாக இணைத்து இருக்கிறான். கி.மு.15 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்தில் இருந்து சிந்து சமவெளி வரை நாகரீகங்கள் தோன்றுவதற்கு கடல் பொங்கியதே காரணமாக இருந்தது. நாடோடியாக திரிந்த மனிதன் ஓரிடத்தில் தங்கினால்தான் நாகரீகத்தை வளர்க்க முடியும். அப்படி மனிதனை ஓரிடத்தில் தங்க வைக்க உருவான இயற்கை ஏற்பாடுதான் சமுத்திரங்கள்.
***************
0 comments:
கருத்துரையிடுக