ஆலயங்கள் பற்றிய அபூர்வ தகவல்கள்




1. தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் பள்ளியறை தரிசன விழா கேரளத்தில் கிடையாது. விதிவிலக்காக திருவஞ்சைக்களம் ஆலயத்தில் மட்டும் அந்த வழக்கம் உண்டு. இரவு பூஜைக்குப் பிறகு சுவாமி அம்பாளை பல்லக்கில் அமர்த்தி வேத மந்திர வாத்திய கோஷத்துடன் அழைத்து பள்ளியறையில் சேர்ப்பார்கள்.



2. எல்லாக் கோவில்களிலும் பூஜை நைவேத்யம் எல்லாம் முதலில் சுவாமிக்கு செய்த பிறகுதான் அம்பாளுக்கு செய்வார்கள். விதிவிலக்காக மதுரையில் மட்டும் மீனாட்சிக்கு செய்த பிறகுதான் சுவாமிக்கு.



3. திருமால் கோவில்கள் அனைத்திலும் சயனக் கோலத்தில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரை தோன்றும். அதில் பிரம்மா அமர்ந்திருப்பார். ஆனால் திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமான் கோவிலில் சயனக் கோலத்தில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரைப்பூ உருவாவதில்லை என்பது தனித்தன்மை.



4. பொதுவாக பெரிய சிவாலயங்களில் மூலவராக சிவபெருமானும், பரிவார மூர்த்திகளாக விநாயகர், மற்றவர்கள் திகழ்வார்கள். சிவபெருமானுக்கே பிரம்மோற்சவம் என்னும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். விதிவிலக்காக திருவலஞ்சுழி திருக்கோவிலில் (பாடல் பெற்ற தலம்) விநாயகருக்குத்தான் பத்து நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.



5. சிவாலயங்களில் கருவறைக்கு மேல் உள்ளது விமானம் என்றும் திருவாசலில் உள்ளது கோபுரம் என்றும் வழங்கப்படும். பொதுவாக கோபுரம் மிகப் பெரியதாக உயரமாக இருக்கும். சான்றாக திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் கோபுரங்கள். விதிவிலக்காக தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோவில் விமானம் உயரமாக உள்ளது.



6. எல்லா சிவாலயங்களிலும் தேர்த்திருவிழாவில் சோமாஸ்கந்த மூர்த்திதான் உலா வருவார். விதிவிலக்காக சிதம்பரம் திருக்கோவிலில் ஸ்ரீ நடராஜாவும் ஆலங்குடி திருக்கோவிலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும் உலா வருவார்கள்.



7. ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில்களில் மூலவராக யோக நரசிம்மர் தான் இருப்பார். விதிவிலக்காக பாண்டிச்சேரி, விழுப்புரம் பாதையில் உள்ள சிங்கிரி கோவில் என்னும் தலத்தில் உக்கிர நரசிம்மர் மூலவராக உள்ளார். அச்சத்திற்கு பதில் அமைதி தவழ்கிறது. உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட திருக்கோவில் இது ஒன்றுதான்.



8. தமிழகத்தில் எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி உண்டு. விதிவிலக்காக பிரசித்தி பெற்ற திருக்கோவிலான திருக்கடவூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.



9. ஆகமப்படி அர்த்தநாரீஸ்வரர் நின்ற நிலையில் தான் இருப்பார். விதிவிலக்காக திருக்கண்டியூரில் இரண்டாவது திருச்சுற்றில் உட்கார்ந்த நிலையில் உட்குடி ஆசனத்தில் உருவாக்கப்பட்டுள்ளார்.



10. பொதுவாக தினசரி திருமஞ்சனம் திருமால் திருக்கோவில்களில் மூலவருக்குக் கிடையாது. விதிவிலக்காக நெல்லை மாவட்ட நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்ட ஸ்ரீ கண்ணபிரானுக்கு தினசரி முதலில் பாலாபிஷேகம் நடைபெறும். பின் மந்திர பூஷ்பங்களுடன் நவகலசாபிஷேகம் நடைபெறும்.



11. பொதுவாக தாழம்பூ சிவாலயங்களில் பயன்படுத்தக்கூடாது. விதிவிலக்காக உத்தர கோசமங்கையில் ஸ்ரீமங்களேஸ்வரருக்கு தாழம்பூ உகந்தது. தாழம்பூவால் பூஜிக்கப்படக்கூடிய ஒரே சிவத்தலம் இதுவே.



12. வட இந்தியாவில் எங்கும் தேர்த்திருவிழா நடைபெறுவது கிடையாது. விதிவிலக்காக பூரிஜகநாதர் ஆலயத்தில் மட்டும் தான் தேர் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.



13. திருக்கோவில்களில் நடைபெறும் பெருந்திருவிழாவை பிரம்மன் நடத்துகிறான் எனும் பாங்கில் பிரம்மோற்சவம் என்பார்கள்.



14. திருக்கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவம் எனும் பெருந்திருவிழா பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும். ஆனால் மார்கழி மாதத்தில் இரண்டு திருத்தலங்களில் தான் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஒன்று வைணவர்கள் கோவில் எனப்படும் ஸ்ரீரங்கம், மற்றது சைவர்கள் கோவில் எனப்படும் சிதம்பரம்.



15. எல்லா திருமால் திருக்கோவில்களிலும் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார் சந்நிதி இருக்கும். ஆனால் விதிவிலக்காக திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கருடாழ்வார் சந்நிதி இல்லை.



16. எல்லா சிவாலயங்களிலும் முதல் பூஜை விநாயகருக்குத்தான். ஆனால் திருச்செங்காட்டங்குடியில் கணபதீ சன்னதியில் சிவபெருமானுக்கு பூஜை முடிந்த பிறகே விநாயகருக்கு பூஜை. விநாயகர் தன் தந்தாயாகிய சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற ஐதீகத்தில்.



17. எல்லா சிவாலயங்களிலும் ஈசானிய மூலையில் நவக்கிரகம் இருக்கும். விதிவிலக்காக விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் நவக்கிரகங்கள் அக்னி மூலையில் உள்ளன.





18. பொதுவாக எந்த ஊரிலும் விநாயகர் திருக்கோவிலில் பள்ளியறை கிடையாது. விதிவிலக்காக புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை உண்டு.



19. எல்லா திருக்கோவில்களிலும் ஐந்து கரங்களுடன் காட்சி தருவார் விநாயகப்பெருமான். ஆனால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், கர்நாடகா கோகர்ணம் திருத்தலத்தில் உள்ள விநாயகரும் இரண்டு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றனர்.



20. திருவண்ணாமலை திருக்கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரத்தன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு. வேறு எந்த சிவாலயத்திலும் இந்த வழக்கம் இல்லை.




21. எல்லா திருத்தலங்களிலும் இராஜ கோபுரத்தின் முன் வலப்புரம் விநாயகரும் இடப்புரம் முருகனும் இருப்பார்கள். ஆனால் உத்தர கோசமங்கை தலத்தில் வலப்புரம் முருகனும் இடப்புரம் விநாயகரும் கோவில் கொண்டுள்ளார்கள்.



22. பெண்களின் நெற்றி வகிடு, மார்பு போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் பண்ணுவதால் பெண்களின் எல்லா அங்கங்களும் சாமான்யமாக பூமியில் படும்படியாக அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவதை ஆசார முறை தடுக்கிறது. ஆனால் அங்கப் பிரதட்சணம் எனும் வழிபாட்டு முறையில் அங்கங்கள் பூமியில் படலாம் என்பது விதிவிலக்கு.



23. வீடுகளில் தினசரி பால் காய்ச்சும் போது பொங்கி வழிவதை அசுபமாகக் கருதுவர். சொல்லவும் கேட்கவும் கூசுவர். ஆனால் பொங்கல் திருநாள் மட்டும் பால் பொங்குவதை விரும்புவர். பால் பொங்கிற்றா என்றே கேட்டு மகிழ்வர்.



24. பொதுவாக திருக்கோவில்களில் பலிபீடமும் கொடிமரமும் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும். ஆனால் காஞ்சிக்கு அருகில் உள்ள திருப்புட்குழி தலத்தில் கொடி மரமும் பலிபீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.



25. எல்லா ஊர்க்கோவில்களிலும் தேர்களும் ரதங்களும் நிரந்தரமாக இருக்கும். விதிவிலக்காக பூரி ஜகந்நாதர் திருக்கோவில் ரதம் ஒவ்வொர் ஆண்டும் புதிதாகச் செய்யப்படும்.



26. எல்லாக் கோவில்களிலும் சந்நிதித் தெருவில் யாராவது இறந்தால் திருக்கோவில் மூடிவிடுவது வழக்கம். ஆனால் ஸ்ரீ வாஞ்சியத்தில் கோவிலில் யமனே உள்ளதால் மரணத்தீட்டு கிடையாது.


----------------------------

0 comments:

கருத்துரையிடுக