வியட்நாமின் ஒளி
உலக வரலாற்றின் புரட்சியாளர்களில் குறிப்பிடத்தக்க நபர், ஹோசிமின். பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா என பல நாடுகளின் யுத்தக்களமாக விளங்கிய வியட்நாமை மீட்டு சுதந்திரம் பெற வைத்தவர், இவர்.
1890-ம் ஆண்டு தனது பெற்றோருக்கு 3-வது குழந்தையாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கிங்சுங். ஜப்பான், பிரான்ஸ் நாடுகளிடம் அடிமையாக கிடந்த வியட்நாமை விடுவித்து நாட்டுக்கு ஒளியை கொண்டு வந்தவர் என்ற அர்த்தத்தில் ஹோசிமின் என்று பெயர் மாறியது. ஹோசிமின் சிறுவனாக இருக்கும்போது வியட்நாம் பிரான்சிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. இது அவர் மனதை பாதித்தது.
வாலிபனான பிறகு தனது மக்களின் அடிமைச்சங்கிலியை உடைத்தெறிய உறுதி கொண்டார்.
பிரான்சின் ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டார். வலிமையும், ஆயுத பலமும் கொண்டிருந்த பிரான்சை இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிரான்சை ஜெயிக்க திட்டமிடுவதற்காக பாரீசிற்கு சென்று ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலைபார்த்தார். 1940-ல் வியட்நாமை பிரான்சிடமிருந்து ஜப்பான் கைப்பற்றியது. பிரான்ஸ் மீது இருந்த வெறுப்பில் வியட்நாம் மக்கள், ஜப்பான் ராணுவ வீரர்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்களாகவே பார்த்தனர்.
அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின், ‘மூக்கணாங்கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. பிரான்சாக இருந்தாலும் சரி, ஜப்பானாக இருந்தாலும் சரி, நமக்கு பெயர் அடிமைகள் தான். இரண்டுபேரையுமே விரட்டினால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்க முடியும்' என்றார்.
இதைக்கேட்ட ஜப்பான் ஹோசிமினை கைது செய்தது. நாடு முழுக்க அது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஹோசிமின் விடுதலையானார். கொரில்லா படையை உருவாக்கினார். 1945ல் இரண்டாம் உலகப்போரில் தோல்வி பயத்தில் ஜப்பான் இருந்தபோது, ஹோசிமின் படை ஜப்பானிடம் இருந்து வியட்நாமை கைப்பற்றியது. உடனடியாக தேர்தலும் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் ஹோசிமினின் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. மக்கள் தங்கள் தலைவனாக ஹோசிமினை கொண்டாடினார்கள்.
இதை பொறுக்க முடியாத பிரான்ஸ் உடனடியாக வியட்நாம் மீது போர் தொடுத்தது. முதல் வியட்நாம் யுத்தம் தொடங்கியது. போர்க்கப்பல்கள், போர்விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்களோடு வந்த பிரான்சை சமாளிக்க ஹோசிமின்னின் படை திணறிப்போனது.
ஆனால் அடர்ந்த காடுகளில் கடுமையாக பயிற்சி பெற்ற ஹோசிமின் படை பிரான்ஸ் வசம் இருந்து வியட்நாமின் வடக்கு பகுதியை மீட்டது. தெற்கு பகுதி பிரான்ஸ் வசமே இருந்தது. பின்னர் அமெரிக்கா வடக்கு பகுதியை கைப்பற்றியது. தொடர்ந்து போரிட்ட ஹோசிமின் படை அதை மீண்டும் மீட்டது. பல ஆண்டுகளாக யுத்தக்களமாக விளங்கிய வியட்நாமில் இருந்து அன்னிய நாடுகள் விரட்டப்பட்டன. இரண்டு பகுதியும் இணைந்து ஒன்றுபட்ட வியட்நாம் 1976-ல் உருவானது.
பலநாடுகளின் போர்க்களமாக விளங்கிய வியட்நாமில், மக்கள் தலைவனாக என்றும் போற்றப்படுபவர் ஹோசிமின்.
0 comments:
கருத்துரையிடுக