தேசத்தந்தையும்... தேன்தமிழும்...!

              மகாத்மா காந்தி, தமிழ் கற்றுக் கொண்டதன் காரணம் என்ன? என்பதற்கு காந்திஜி ஒரு முறை விளக்கம் அளித்தார். 'இந்தியன் ஒப்பினியன்' என்ற இதழில் 5-6-1909 அன்று அவர் எழுதிய விளக்கம் இங்கே அப்படியே தரப்படுகிறது...

               'இந்தப் போராட்டத்தில் (தென்னாப்பிரிக்கப் போராட்டம்) தமிழர்களுக்கு இணையான அளவு இந்தியர்களில் வேறு எவருமே பங்காற்றவில்லை. ஆகையால் தமிழை நான் மிகுந்த கவனத்துடன் கற்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வேறு காரணத்திற்காக அல்லாவிட்டாலும் என் மனதளவிலாவது என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக நான் தமிழை கற்றேன். நான் அம்மொழியைப் படிக்கப்படிக்க அதனுடைய அழகுகளை அதிகமாகக் கண்டு அனுபவிக்கிறேன். அது மிகமிக எழில் நிறைந்த இனிய மொழி. அதனுடைய அமைப்பிலிருந்தும் அதில் நான் படித்தவற்றுள் இருந்தும், தமிழர்கள் மத்தியில் புத்திக்கூர்மையும், சிந்தனா சக்தியும் உள்ள விவேகம் நிறைந்த ஏராளமான மக்கள் இருந்திருக்கிறார்கள். மேலும் மேலும் அவர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன்' என்று எழுதி வானளாவ தமிழையும், தமிழர்களையும் புகழ்ந்துள்ளார்.

               நம் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு தமிழர்களோடும், தமிழ் மொழியோடும் நீண்ட, நெடிய பந்தம் இருந்தது. அவர் தமிழ் கற்றுக் கொண்டது, தமிழால் கற்றுக் கொண்டது, தமிழர்களால் கற்றுக் கொண்டது ஏராளம். மகாத்மாவின் இனிய தமிழ்ப்பயணம் இதோ...

* நான் ஏன் தமிழ்கற்றுக் கொள்கிறேன் என்ற கேள்விக்கு, தமிழர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தத்தான் என்று காந்தி பதில் அளித்தார்.

* காந்திஜி சிறைக்குச் சென்றாலும், எங்கு பயணம் மேற்கொண்டாலும் கைவசம் சில தமிழ்நூல்கள் வைத்திருப்பார் என்பது நமக்கெல்லாம் பெருமைதரக் கூடியது.

* காந்தி மகான் 36 வயதில் தமிழ் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அப்போது போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். அங்கு ஜி.யு.போப் எழுதிய 'பாலபாடம்' என்ற இலக்கண நூலின் துணையுடன் தமிழைப் படிக்க ஆரம்பித்தார். வாழ்வின் இறுதி வரை தமிழை மெல்ல மெல்ல கற்றுவந்துள்ளார்.

* காந்திஜியின் வாழ்க்கையின் பெரும்பகுதி போராட்டங்களில் பங்கெடுப்பதிலும், சிறைகளிலும், பயணங்கள் மேற்கொண்டதிலும் கழிந்தது. எனவேதான் அவர் தமிழ்கற்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டார்.

* 1915 ஜூலை 16-ல் லால்பகதூர் சாஸ்திரிக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு தமிழ் கற்றுத் தர ஒருவரை நியமிக்கும்படி கேட்டிருந்தார். தம் ஆசிரமத்திற்கு ஒரு தமிழாசிரியை நியமிக்க தந்தை விரும்பியதாக மகன் லால்காந்தி ஒரு முறை கூறினார். பின்னாளில் ஆசிரமத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட 4 மொழிகளில் தமிழும் ஒன்றாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.



* ராஜகோபாலாச்சாரி, வி.ஏ.சுந்தரம், நடேசன் போன்றோரிடம் காந்தி தமிழ்ப் பாடங்கள் பயின்றுள்ளார். பின்னாளில் பரசுராம், சங்கரன் என்ற இரு தமிழர்களும் காந்தியின் இறுதி நாள்வரை அவருடன் இருந்து தமிழ் கற்பித்து வந்தனர்.

* 1913-ம் ஆண்டில் பிளோம் போண்டீன் சிறையில் காந்திஜி அடைக்கப்பட்டிருந்தார். 'அங்கு தினமும் 8 மணி நேரம் எழுதவும் படிக்கவும் செலவிட்டேன். அதில் பெரும்பகுதி தமிழுக்குச் செலவிட்டேன்' என்று நண்பர் மணிலால் காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருக்கிறார் மகாத்மா.

* ராஜாஜியிடம் தபால்வழிக் கல்வி மூலம் காந்தி பாடங்களைக் கற்றுக் கொண்டார். காந்தி பெரிதும் சிரத்தை எடுத்து எழுத்துப் பிழைகள் ஏற்பட்டாலும் தமிழிலேயே கடிதம் எழுதுவார். பிழைகளைத் திருத்தி ராஜாஜி பதில் அனுப்புவார்.

* சென்னையைச் சேர்ந்த பண்டிதர் நடேசனாரிடம் மகாத்மா காந்தி திருக்குறள் பாடம் கற்றுக் கொண்டார்.

* அந்தக் காலத்தில் தமிழர்களுக்கு தமிழ்ப்பற்று குறைவாக இருந்தது கண்டு காந்தி வருத்தமும் தெரிவித்துள்ளார். 'தமிழ் மூலம் கல்வி கற்பிக்க வேண்டுமென்ற இயக்கம் தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கி இருக்கிறது. தமிழர்கள் ஆங்கிலத்தின் செல்வாக்கில் அக்கறை கொண்டிருப்பதால் தமிழைப் பாடமொழியாக்குவதற்கான முயற்சியில் அக்கறை கொள்வதில்லை' என்று 1917 அக்டோபர் 20-ல் கருத்துக் கூறினார்.

* தமிழில் காந்திஜிக்குப் பிடித்தது திருக்குறள். அதில் அவருக்கு மிகவும் பிடித்த குறள் 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பதாகும்.

* ஒரு தமிழ்ப்பழமொழியை அவர் எப்போதும் உச்சரிப்பார், கையாளுவார். அந்தப் பழமொழி 'திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்பதாகும். 'இந்தச் சத்தியத்தின் அடிப்படையில்தான் என் சத்தியாகிரகத்தின் மகத்தான தத்துவமே எழுந்தது' என்று அவர் விளக்கம் கொடுத்தது நம் தமிழுக்கு கிடைத்த பெருமையாகக் கருதலாம்.

* தமிழ் பக்தி நூல்களில் காந்திக்கு மிகவும் பிடித்தது திருவாசகம். சபர்மதி ஆசிரமத்திலும், சேவா கிராமத்திலும் 'முக்திநெறி யறியாத மூர்க்கரொடு' என்று தொடங்கும் திருவாசகப் பாடல் தினமும் பாடப்படுவதுண்டு.

* ஒரு முறை ராஜாஜி தம் மகனுக்கு ஆங்கில மொழியில் கடிதம் எழுதியிருப்பதை காந்திஜி அறிந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர், அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து தாய்மொழிப்பற்று பற்றி ராஜாஜிக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் 'இளைஞர் ராமசாமி (பெரியார்) உயர்ந்த விஞ்ஞான சிந்தனைகளுக்கு அதை (தமிழை) பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டார். எனக்கு நம்பிக்கையாக இருக்கும் நீங்களும் உங்கள் மகனுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதியது என் மனதை சுக்கு நூறாக்கிவிட்டது. நேற்று இரவு தூக்கமில்லாமல் அதிகாலையில் எழுந்து உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். தமிழ் புதல்வர்களே புறக்கணித்துவிட்டால் தமிழ்ப்பணி எப்படிச் செய்வது. சிறந்த தமிழில் கடிதம் எழுதுவதாக உறுதி அளியுங்கள்' என்று கூறி இருக்கிறார் காந்திஜி.

* பழம்பெரும் நாடாகிய பாரதநாடு ஒரே நாடாக இருக்கப்போவதால் சென்னை மாநிலத்திற்கு வெளியே உள்ள இந்தியர்களும் தமிழைக் கற்க வேண்டும் என்று அவர் பலமுறை கடிதம் எழுதி உள்ளார். காந்தியின் 1909-ம் ஆண்டுகால கடிதங்களில் இந்தக் கருத்துக்களைக் காணலாம்.

* காந்தியின் மகன், லால்காந்தியும் தம் மனைவியுடன் 1915-ல் சென்னை தமிழ் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

                                ---------------------------

1 கருத்து: