காமிராவின் தொடக்கம்



               இன்று காமிரா என்பது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. மொபைல் போன்களில் கூட தரமான காமிராக்கள் வந்துவிட்டன. டிஜிட்டல் என்ற ஒன்று உருவானபின்னர் ஏற்பட்ட வளர்ச்சிதான் இது. காமிராவின் வளர்ச்சி 1578ல் இருந்து தொடங்குகிறது.
             ஜியாபாட்டிஸ்டா டெலலாபோர்டா என்பவர்தான் முதல் காமிராவான அப்ஸ்க்யூராவை உருவாக்கியவர். அதை ஊசி ஓட்டை காமிரா என்று அழைத்தனர்.
            ஆரம்பகால காமிராக்களை உருவாக்கியதில் ஓவியர்களுக்கு மிக முக்கிய பங்கு இருந்தது. தங்கள் முன் தெரியும் காட்சியை தத்ரூபமாக வரைவதற்காக அவர்கள் காமிராவை பயன்படுத்தினார்கள்.
காமிராவின் சிறிய துளை மூலம் ஊடுருவி வரும் ஒளியை ஒரு டிராயிங் பேப்பரில் விழச்செய்து அதை அப்படியே ஸ்கெட்ச் செய்து கொள்வதில் ஆரம்பித்தது தான் காமிராவின் கதை.
             1814ல் பிரான்ஸ் நாட்டில் முதல் போட்டோ மரப்பெட்டி காமிரா மூலம் எடுக்கப்பட்டது. நாம் பார்க்கும் காட்சியை ஒளியில் பதிவு செய்து நிழற்படமாக மாற்றிக்கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் காமிரா.
போட்டோகிராபி என்ற ஆங்கிலச்சொல், போட்டோஸ் மற்றும் கிராபி என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. இதில் போட்டோஸ் என்பது ஒளியையும், கிராபி என்பது வரைவதையும் குறிக்கிறது.
1839ல் விஞ்ஞானி சல்ஜான் எம்.வி.ஹெர்செல் என்பவர்தான் முதன்முதலாக போட்டோகிராபி என்ற சொல்லை பயன்படுத்தினார். விஞ்ஞான அடிப்படையில் போட்டோகிராபி என்பது ஒளியின் வினையால் பிலிமில் ஏற்படும் ரசாயன மாற்றத்தின் நிகழ்வையே குறிக்கும்.
              தற்போது நாம் பயன்படுத்திவரும் போட்டோகிராபி முறையை அறிமுகப்படுத்தியவர் ஜாக்ஸ்மோர்ட் டாகுரி என்பவர். பெயிண்டரான டாகுரி ஜொசர் நிக்கோபர் நிப்ஸ் என்பவருடன் இணைந்து 1829ல் காமிராவுக்கு நிலையான இறுதி வடிவம் கொடுத்தார். பலவருட ஆராய்ச்சிக்குப்பின் இது சாத்தியமானது. இதற்கு டாகுரியோ டைப் என்றே பெயர் வைக்கப்பட்டது. இது மிகவும் பிரபலமானது.
             1884-ல் டபிள்யூ. எச்.வாக்கர் என்பவர் காமிராவுக்கான ரோல் பிலிமை கண்டுபிடித்தார். ஜார்ஜ் ஈஸ்ட்மென் 1888ல் அதை வியாபாரம் செய்தார். 1889ல் கோடாக் பாக்ஸ் காமிரா அறிமுகமானது. இந்த காமிராவில் 100 படங்கள் எடுக்கும் அளவிற்கு பிலிம் லோடு செய்யப்பட்டிருக்கும். படம் எடுத்தபின் காமிராவை தூக்கிக்கொண்டு கோடாக் கம்பெனிக்கு போக வேண்டும். அவர்கள் அந்த பிலிமை தனியாக இருட்டறையில் எடுத்து புதிதாக 100 படங்கள் எடுக்கும் விதத்தில் புதிய பிலிமை மாற்றி கொடுப்பார்கள்.
ஜார்ஜ் ஈஸ்ட்மென் நிறைய மாடல்களை காமிராவில் அறிமுகப்படுத்தினார். மடக்கி எடுத்துச் செல்லக்கூடிய போல்டிங் காமிராவும் அதில் உண்டு. எட்வின் லேண்ட் என்பவர் 1948ல் முதல் போலராய்டு காமிராவை உருவாக்கினார். காமிராவுக்குள்ளேயே படங்களை டெவலப் செய்யும் வசதி அதில் இருந்தது. எடுத்த படத்தை சில நொடிகளில் பார்க்க முடிந்தது.
             கோடாக் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு காமிரா டிஸ்க் என்ற வகையை அறிமுகப்படுத்தியது. அதில் பிலிம் கிடையாது. எடுத்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் தான் பார்க்க முடியும், பிரிண்ட் போட முடியும். இன்றைய டிஜிட்டல் காமிராக்களுக்கு அதுவே முன்னோடி எனலாம்.
                           --------------------------

0 comments:

கருத்துரையிடுக