நமது பூமி மிகப்பெரிய காந்தக்கல் போன்றது. பூமியின் வடதுருவம் காந்த அதிர்வுகளை எழுப்பி அனுப்புகிறது. தென் துருவம் அந்த அதிர்வுகளை பெறுகிறது. இந்த அதிர்வுகளின் ஓட்டம் தொடர்ந்து இரவிலும், பகலிலும் இடைவிடாது நடந்துக் கொண்டே இருக்கிறது.
நமது உடலிலும் பல்வேறு அமைப்பில் இரும்புச்சத்து உள்ளது. மூளையில் உள்ள திசுக்களில் இருந்து பல்வேறு அதிர்வுகள் உற்பத்தியாகி, உடல் முழுவதும் பரவி, பாதங்கள் வரை சென்றடைகின்றன. அதனால், நமது உடலும் ஒரு காந்த சக்தியைப் போல் செயல்படுகிறது. தலை பாகம் வடதுருவமாகவும், பாதங்கள் தென்துருவமாகவும் செயல்படுகிறது, என்கிறது அறிவியல்.
இதனால்தான், தெற்கில் தலை வைத்துப் படுப்பது நல்லது என்கிறது வாஸ்து சாஸ்திரம். அந்த திசையில் தலை வைத்து படுத்தால்தான் ஆழ்ந்த தூக்கம் வரும்.
இது ஏன் என்பதற்கு ஒரு சிறிய விளக்கம்: இரு வேறு துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும், ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பது காந்த விதி.
அதாவது, பூமியின் வடதுருவத்தை நோக்கி நாம் தலைவைத்து படுப்பதால், இரண்டு வடதுருவங்களும் ஒன்றை ஒன்று எதிர்த்து, ஆழ்ந்த உறக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். தென்திசையில் தலை வைத்து படுப்பதால் தலையின் வடதுருவ சக்தியும் பூமியின் தென் துருவ சக்தியும் ஒன்றை ஒன்று ஈர்த்து நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
இதைத்தான் வடக்கே தலை வைத்து படுத்தால், பூத கணங்கள் தலையை வெட்டி விடுவார்கள், என்று பெரியவர்கள் புராண கதைகள் மூலம் கூறுவார்கள்.
சரி... இனி, படுக்கையறையில் எப்படி படுக்க வேண்டும் என்று பார்ப்போம்...
* எந்த பெட்ரூமில் பெட் அமைத்தாலும், தெற்கு திசையில் உள்ள சுவரை ஒட்டியே தலை வைத்து படுக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
* வடக்கு திசையில் தலை வைத்து கண்டிப்பாக படுக்கக் கூடாது. கிழக்கு,
மேற்கு திசைகளில் தலை வைத்து படுக்கலாம். அதில் தவறில்லை.
* பெட்ரூம் கதவு, பாத்ரூம் கதவு எதிரே படுக்கக் கூடாது.
* முகம் பார்க்கும் கண்ணாடி எதிரே வருமாறு படுக்கக் கூடாது.
* பெட்ரூமின் வடக்கு, கிழக்கு சுவர்களில் அதிகமாக எடை உள்ள பொருள்களை வைக்கக் கூடாது.
* கோணமாக படுக்கை போடக் கூடாது.
கிழக்கு திசையானது சூரியனின் சக்திகளை நன்றாக ஈர்த்து பரப்புவதால், கிழக்கில் தலை வைத்து படுப்பதன் மூலம் நல்ல சக்தி நமக்கு கிடைக்கும். மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு படிப்பிலும் செயலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தால், அவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மேற்கில் தலை வைத்து படுப்பதால் கனவுத் தொல்லை ஏற்படலாம்.வடக்கில் தலை வைத்து படுத்தால் உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படும். தெற்கில் தலை வைத்து படுப்பதுதான் சந்தோஷத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் தரும்.
0 comments:
கருத்துரையிடுக