மகாபாரதம் எழுதிய விநாயகர்

நமது நாட்டை பரத வம்சத்தினர் ஆண்டு வந்ததால், நமது நாட்டுக்கு 'பாரதநாடு' என்ற பெயர் வந்தது. பரத வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசர் விசித்திர வீரியன். இவருக்கு 2 மனைவிகள். குழந்தைகள் இல்லை. ஒரு நாள் அவர் இறந்து போனார்.
அப்போது வியாசரின் தவ வலிமையால் விசித்திர வீரியனின் மனைவிகளுக்கு குழந்தை வரம் அளிக்கப்பட்டது. அந்த நேரம் பணிப் பெண் ஒருவருக்கும் வியாசர் குழந்தை வரம் அளித்தார். இந்த மூன்று குழந்தைகளும் அரண்மனையில் வளர்ந்து வந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு வியாசர் தவம் செய்வதற்காக காட்டுக்குச் சென்றார். அப்போது பரத வம்சத்தில் கடும் போர் நடந்தது. இதுவே மகாபாரத போர். அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் வியாசர் தன் ஞானத்தால் அறிந்தார். அதை உலகுக்குத் தெரியப்படுத்த அவர் விரும்பினார்.
அந்த நிகழ்ச்சிகளை முழுவதும் எழுதுவதற்காக விநாயகரை,  வியாசர் சென்று பார்த்தார். அவரை வணங்கி, 'பெருமானே... நான் அறிந்த மகாபாரதத்தை இந்த உலக மக்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறேன். அதனால், நான் கூறும் நிகழ்ச்சிகளை எனக்கு எழுதி தரும்படி பணிபவுடன் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
அதற்கு விநாயகர், 'நீங்கள் கேட்டபடியே நான் எழுதுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. எழுதும் போது நிறுத்த மாட்டேன். அதற்கு ஏற்றாற் போல் நீங்கள் கூற வேண்டும்' என்றார்.
விநாயகர் கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார் வியாசர். 'நீங்கள் கூறியபடியே மகாபாரதத்தை எழுதலாம். ஆனால், எழுதும் போது எந்த சந்தேகங்களையும் என்னிடம் கேட்கக் கூடாது' என்று வியாசரும், விநாயகருக்கு நிபந்தனை போட்டார். அதற்கு அவரும் சம்மதித்தார்.
மகாபாரத நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வியாசர் சொல்லச் சொல்ல... விநாயகரும் எழுதத் தொடங்கினார். கடினமான சுலோகங்களை சொன்னார். அப்போது விநாயகர் எழுதுவதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தார்.
அந்த இடைவெளியில் வியாசர் மேலும் பல சுலோகங்களை நினைவுபடுத்திக் கொண்டார். இவ்வாறு, 96 ஆயிரத்து 635 சுலோகங்கள் எழுதப்பட்ட இதிகாசமானது மகாபாரதம். இந்த இதிகாசம் இயற்றப்பட்டது திரேதாயுகத்தில்!

0 comments:

கருத்துரையிடுக