லேப்டாப் டைப்பிங்
பொள்ளாச்சியிலிருந்து ஒரு வாசகர், தான் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றை முதன் முதலாகப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாகவும், அதில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் டைப் செய்வது போல வேகமாக டைப் செய்யமுடியவில்லை என்று எழுதி இருந்தார். அதற்கு அவர் கூறும்
காரணம், கீ போர்டில் டைப் செய்ய முயற்சிக்கையில் விரல்கள் கீழாக இருக்கும் மவுஸ் டச் பேடைத் தான் அறியாமலேயே தொடுவதாகவும், அதனால் கர்சர் தன் இஷ்டத்திற்குச் சென்று விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பிரச்னை லேப்டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும். இதற்குக் காரணம், லேப் டாப் கீ போர்டில் கீகள் அனைத்தும் சம தளமாக அமைந்திருப்பது. இரண்டாவதாக, நம் உள்ளங்கைப் பகுதி டச் பேடைத் தொடும் வகையில் வைத்து நாம் டைப் செய்வது. இந்த பிரச்னைக்குப் பயிற்சி தான் மருந்தாக இருக்கும் என்று பல நாட்கள் எண்ணி இருந்தேன். ஆனால் இன்டர்நெட்டில் வேறு ஒரு தீர்வினைத் தேடுகையில் இதற்கு வழி தரும் வகையில் ஒரு சிறிய புரோகிராம் தரப்பட்டது தெரிய வந்தது.
அந்த புரோகிராம் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேடினை செயல்படாமல் வைத்திட நமக்கு வழி காட்டுகிறது. தேவைப்பட்டால் டச் பேடினை இயக்கவும், இல்லாத போது முடக்கி வைக்கவும் உதவுகிறது. இந்த புரோகிராமின் பெயர் டச் ப்ரீஸ் (Touch Freeze). இதனை http://code.google.com /p/touchfreeze/downloads/list என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை இயக்கிவிட்டால், நாம் கீபோர்டில் டைப் செய்கையில், டச் பேட் இயங்குவதை நிறுத்திவிடுகிறது. டைப் செய்வதை நிறுத்திவிட்டால், டச் பேட் தானாக இயங்கத் தொடங்கிவிடுகிறது. இதனை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கி உள்ளனர். இந்த புரோகிராம் பலரின் டைப்பிங் பிரச்னையைத் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
----------------
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி
வீடியோ படங்களுக்கு யு-ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர்.
கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.
இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு-ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும்.
எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம். http://www.youtube.com/results?search_query =thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results? search_query=thillana+ remix& search_type=& aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம்.
------------------
ஆன்லைன் கீபோர்டு
இங்கு சொல்லப்பட இருக்கிற கீ போர்டு இசை அமைக்கப் பயன்படும் கீ போர்டு. பெரிய, சிறிய நகரங்களில் வாழும் குடும்பங்களில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கீ போர்டு வாசிப்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் சிறிய அல்லது பெரிய எலக்ட்ரானிக் கீ போர்டுகளை வாங்கித் தருகின்றனர். சிலர் அருகில் கற்றுக் கொடுக்கும் மையங்களுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பி கீ போர்டை இசைக்கக் கற்றுக் கொடுக்கின்றனர். இவர்களில் குறிப்பிட்ட சிலரே தொடர்ந்து இசை உருவாக்குவதன் முழு பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றனர்.
இது போன்ற ஆசையைத் தீர்க்கும் வகையில் ஆன்லைனில் பல விஷயங்களைக் கற்றுத் ரும் தளம் ஒன்று, கீ போர்டினையும் கற்றுத் தருகிறது. இதன் தளத்திலேயே ஒரு கீ போர்டு தரப்படுகிறது. இதில் Piano, Organ, Saxophone, Flute, Pan Pipes, Strings, Guitar, Steel Drums மற்றும் Double Bass ஆகிய அனைத்து வாத்தியங்களிலும் கிடைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளலாம்; உருவாக்கலாம். இசைக்கையில் துணை புரிய ஆறு வகையான ட்ரம் பீட்ஸ் தரப்பட்டுள்ளது. இந்த கீ போர்டின் இடது பக்கம் மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. அவை Chord Mode, Play Chord மற்றும் Instructions. இந்த வழிகளில் சில கீகளைத் தேர்ந்தெடுத்து, அவை தொடர்ந்து வாசிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ளலாம். Instructions என்ற பிரிவில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்று குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த கீ போர்டில் நாம் விரும்பும் வாத்தியத்தைத் தேர்வு செய்து கீகளை அழுத்திப் பழகலாம். ஏற்கனவே கீ போர்டு இயக்கத் தெரிந்தவர்கள் இதில் இசை அமைக்கலாம். முதலில் உங்கள் சிஸ்டத்தின் ஸ்பீக்கர்களை இயக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒலி மிகத் தெளிவாகக் கிடைக்கிறது.
இசையில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் உள்ள கீ போர்டு எப்படி இசை ஒலியைத் தருகிறது என்று விளையாட்டுக்காகக் கூட இதனை ஒலித்துப் பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.bgfl.org/index.cfm?s= 1&m=239&p=167,view_resource&id=50.
---------------
0 comments:
கருத்துரையிடுக